ADDED : மே 27, 2026 05:21 PM
உடுமலை: பிரதான சந்திப்பிலுள்ள உயர் மின்கோபுர விளக்கு பழுதடைந்துள்ளதால், பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, நகரின் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணியர், அப்பகுதியில் காத்திருந்து பஸ் ஏறிச்செல்கின்றனர்.
வணிக நிறுவனங்களும் அதிகளவு உள்ளதால், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது.
அங்கு, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில், உயர் மின் கோபுர விளக்கு சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதில் பெரும்பாலான விளக்குகள் எரியாமல் அப்பகுதி இருளில் மூழ்குகிறது.
இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
