ADDED : ஜூலை 22, 2024 08:45 PM
உடுமலை:கிளுவங்காட்டூர் கிராம இணைப்பு ரோட்டில், ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் என மக்கள் ஒன்றிய நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே, எலையமுத்துார் பிரிவில் இருந்து, கிளுவங்காட்டூர் செல்லும் கிராம இணைப்பு ரோட்டை, சுற்றுப்பகுதி விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
காய்கறி சாகுபடி பிரதானமாக இருக்கும் இப்பகுதியில், நாள்தோறும், நுாற்றுக்கணக்கான விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, உடுமலை உட்பட பல்வேறு சந்தைகளுக்கு, இந்த ரோடு வழியாக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், எலையமுத்துார் பிரிவு அருகே இணைப்பு ரோடு துவங்கும் பகுதியில், மழை நீர் ஓடை குறுக்கிடுகிறது. ஓடையின் குறுக்கே, தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மழைக்காலத்தில், தடுப்பணை நிரம்பி, அதிகளவு தண்ணீர் ரோட்டை கடந்து செல்கிறது. இதனால், ரோட்டை கடக்க முடியாமல், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
தொடர் மழைக்காலத்தில், இந்த ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கிறது. எனவே, கிளுவங்காட்டூர் கிராம இணைப்பு ரோட்டில் மழை நீர் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

