
பல்லடம்; -பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை -- சோமனுார் ரோடு, பொள்ளாச்சி -- மைசூர் மாநில நெடுஞ்சாலை என்பதால், அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோட்டில் இச்சிப்பட்டி - -காடம்பாடி சந்திப்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நெடுஞ்சாலை துறை வாயிலாக, ரோடு சீரமைக்கப்பட்டது. ஆனால், நால்ரோட்டின் ஒரு பகுதியான, காடாம்பாடி செல்லும் ரோட்டில், உயர் அழுத்த மின்கம்பம் ஒன்று நடுரோட்டில் அகற்றப்படவில்லை. விபத்து அபாயம் உள்ளது.
----
இச்சிப்பட்டி - காடம்பாடி சாலையில், அகற்றப்படாத மின் கம்பம்.
----
சொல்ல மறக்கலாமா?
திருப்பூர், மார்ச் 1-திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் தலைமையில், சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
கூட்டத்துக்கு பின், சாலை விபத்துகள் எண்ணிக்கை, விபத்துக்கான காரணம், அதனால் ஏற்படும் உயிரிழப்பு, காயம் ஏற்படுபவர்கள் விபரம், மாதந்தோறும் விபத்துகள் அதிகரிக்கிறதா, குறைகிறதா என்பது போன்ற புள்ளிவிபரங்கள், விபத்துகளை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவிப்பதில்லை. 'இத்தகைய விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தினால் தான் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கூட்டத்தை சடங்காக நடத்துவதால் என்ன லாபம்?
---
விதி மீறி விற்கலாமா?
திருப்பூர், மார்ச் 1-
குடும்ப நல செயலகம், மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்து, மருந்தகங்களுக்கு கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், காரணம்பேட்டையில் நேற்று நடந்தது. குடும்ப நலத்துறை உதவி இயக்குனர் ராணி பேசுகையில், ''மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்றால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை பாயும். உரிமம் ரத்தாவதுடன், உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல், கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்தால், கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்தாகும்; அரசு மருத்துவமனைகளில் இலவச கருக்கலைப்பு செய்யப்படுகிறது. சேவையை பெறுவோர் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்'' என்றார்.