/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைப்பு ரோட்டில் போக முடியல! சேற்றில் விழும் வாகனங்கள்
/
இணைப்பு ரோட்டில் போக முடியல! சேற்றில் விழும் வாகனங்கள்
இணைப்பு ரோட்டில் போக முடியல! சேற்றில் விழும் வாகனங்கள்
இணைப்பு ரோட்டில் போக முடியல! சேற்றில் விழும் வாகனங்கள்
ADDED : மே 21, 2024 11:51 PM

உடுமலை;குண்டும், குழியுமான கிராம இணைப்பு ரோடு மழைக்குப்பிறகு சேறும், சகதியுமாக மாறி விட்டதால், பல கிராம வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை அருகே முக்கோணத்தில் இருந்து கொங்கல்நகரம் செல்லும் கிராம இணைப்பு ரோட்டில், கணபதிபாளையம், வெனசப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டையம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இவ்வழித்தடத்தை அப்பகுதியைச்சேர்ந்த, நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், தனியார் தொழிற்சாலைகள், காற்றாலைகளும் அப்பகுதியில் உள்ளதால், கனரக வாகன போக்குவரத்தும் இந்த வழித்தடத்தில், அதிகளவு உள்ளது.
போதிய அகலம் இல்லாமல், குறுகலாக இருக்கும் இந்த ரோடு, முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத நிலையில், மழைக்குப்பிறகு, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கணபதிபாளையம் கிராமம் அருகில், கிராம இணைப்பு ரோட்டில், நான்கு வழிச்சாலை குறுக்கிடுகிறது. அவ்விடத்தில், உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலம் கட்டுமான பணிகளுக்காக அங்கு, மண் குவிக்கப்பட்டதுடன், தொடர் பணிகளால், கிராம இணைப்பு ரோடும், முற்றிலுமாக காணாமல் போய் மண் வழித்தடமாக மாறி விட்டது.
சமீபத்தில் பெய்த மழைக்குப்பிறகு, அந்த இடம் முழுவதும், சேறும், சகதியுமாக மாறி விட்டது. தண்ணீர் தேங்கி, குழியாக மாறியுள்ளதால், இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரே அரசு பஸ்சும், நிறுத்தப்படும் நிலை உள்ளது.
எனவே, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

