/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பந்தலில் பாகற்காய் மகசூல் துாள்
/
பந்தலில் பாகற்காய் மகசூல் துாள்
ADDED : ஜூன் 03, 2024 11:58 PM
உடுமலை;விளைநிலங்களில் பந்தல் அமைத்து பாகற்காய் உள்ளிட்ட சாகுபடிகளை மேற்கொள்ள உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. இதில், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் பிரதானமாக சாகுபடியானது.
கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில், தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ், பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது; மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது.
பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம்.
பாகற்காய் சாகுபடியில், பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும், 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு, 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம். சொட்டு நீர் வாயிலாக பாசனம் செய்கிறோம்.
சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், ஏக்கருக்கு குறைந்தபட்சம், 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொடர் பயன்பாட்டிலுள்ள பந்தல் அமைப்பை சீரமைக்க கூடுதலாக செலவாகிறது.
இவ்வாறு, தெரிவித்தனர்.