/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊடுபயிர்கள் தேர்வில் கவனம் தேவை
/
ஊடுபயிர்கள் தேர்வில் கவனம் தேவை
ADDED : மார் 31, 2024 08:59 PM
உடுமலை;தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத்தேர்வு செய்யும் போது, அந்தப்பகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை ஒரு பருவப்பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம். கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
7 - -20 ஆண்டுகள் வயதுள்ள தோப்பில், பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை, நேப்பியர் மற்றும் கினியா புல் பயிர் செய்யலாம். ஊடுபயிர் செய்ய தோப்புக்குள் வரும் சூரிய ஒளி 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கவேண்டும்.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய மரங்கள் உள்ள தோப்புகளில், நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
வாழையில் பூவன் மற்றும் மொந்தன் ரகங்கள் ஏற்றவைகளாகும். கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா), ஜாதிக்காய் மற்றும் வெனிலா. இத்தகைய பயிர் அமைப்புகளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நீர் பாசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.

