பி.எப். உச்ச வரம்பு அதிகரிப்பு: தொழிலாளருக்கு பயன் கிடைக்கும்!
பி.எப். உச்ச வரம்பு அதிகரிப்பு: தொழிலாளருக்கு பயன் கிடைக்கும்!
UPDATED : செப் 19, 2026 09:47 PM
ADDED : செப் 19, 2026 09:27 PM

திருப்பூர்: நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.)க்கான ஊதிய உச்ச வரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெற வாய்ப்புள்ளதாக பி.எப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பங்கும், நிறுவனத்தின் சார்பில் ஒரு பங்கும் ஒவ்வொரு மாதமும் பி.எப். கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த சேமிப்பு பணியாளர்களின் ஓய்வுக்காலத்தில் உதவியாக இருக்கும்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பி.எப். உறுப்பினராக கட்டாயம் சேருவதற்கான மாத சம்பள உச்ச வரம்பு ரூ.15 ஆயிரமாக இருந்து வந்தது. தற்போது இந்த வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்த மத்திய அமைச்சரவை செப். 16-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றம் செப். 17 முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் புதிய பணியாளர்களும் கட்டாய பி.எப். பாதுகாப்புக்குள் வருவார்கள். நாடு முழுவதும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலில் அதிகளவில் தொழிலாளர்களை கொண்டுள்ளதால், பி.எப். உச்ச வரம்பு உயர்வு இப்பகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொழிலாளர்களுக்கு என்ன பயன்?
ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்கள் கட்டாய பி.எப். வரம்புக்குள் வருவதால், அவர்களுக்கு பி.எப். சேமிப்பு, ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
அதேநேரத்தில், புதிய உச்ச வரம்பு காரணமாக சில ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பி.எப். பங்களிப்பு அதிகரிக்கலாம். இதனால் மாதந்தோறும் கையில் கிடைக்கும் சம்பளம் சற்று குறையலாம். ஆனால், பி.எப். கணக்கில் சேமிக்கப்படும் தொகை அதிகரிக்கும்.
மேலும், ஊழியர்களின் பி.எப். பங்களிப்புக்கு ஏற்ப நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும். தொழிலாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பி.எப். உச்ச வரம்பு உயர்வு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.எப். அலுவலக தகவல்படி, தற்போது 11,782 நிறுவனங்களில் 5.04 லட்சம் பேர் பி.எப். பங்களிப்பு செய்து வருகின்றனர். மேலும், 82 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியப் பலன்களை பெற்று வருகின்றனர்.
