ADDED : மே 31, 2024 01:41 AM

திருப்பூர்:முன்பதிவு செய்த பயணிகள் பஸ் வருவதை எதிர்பார்த்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர்.
தினசரி திருப்பூரில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) பஸ் இயக்கப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ், 8:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:00 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணி வரை இந்த பஸ் மத்திய பஸ் ஸ்டாண்ட் வரவில்லை.
7:30க்கு வர வேண்டிய பஸ், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, 9:15க்கு வந்து சேர்ந்தது.
பயணிகள் கூறுகையில், ''திருப்பூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ் வாரத்தின் மூன்று நாட்கள் இப்படி தாமதமாகத் தான் வருகிறது. திருப்பூருக்கான பஸ்ஸை வேறு பகுதிக்கு அனுப்பி விட்டு, கோவையிலிருந்து சென்னை செல்லும் பஸ்சை மாற்று பஸ் ஆக அனுப்பி வைக்கின்றனர் முன்பதிவு செய்த பஸ் ஒன்றாகவும் வந்து சேரும் பஸ் மற்றொன்றாகவும் உள்ளது'' என்றனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பஸ்களின் இயக்கம் குறித்தும் வந்து சேரும் நேரம், புறப்படும் இடம் உள்ளிட்ட விபரங்களை 94450 14436 என்ற எண்ணில் பயணிகள் அறிந்து கொள்ளலாம். பஸ் வர தாமதம் ஏற்பட்டால் சென்னை கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம்'' என்றனர்.