/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'காங்கயம், தாராபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை'
/
'காங்கயம், தாராபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை'
ADDED : ஆக 11, 2024 11:40 PM

திருப்பூர்:''திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் ஆகிய இடங்களில் புதிதாக தலைமை அரசு மருத்துவமனை அமைக்கப்படும். தேவையான மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்படும்'' என, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
திருப்பூர், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டியுள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின், அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பலரும் திருப்பூரில் வந்து பணியாற்றுவதால், அதற்கேற்ப மருத் துவ கட்டமைப்பை தொடர்ந்து உயர்த்த வேண் டியது அவசியமாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 23 துணை சுகாதார நிலையங்கள் 6.10 கோடி மதிப்பிலும், 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5.84 கோடி மதிப்பிலும் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனையில் பி.சி.ஆர்., லேப் மற்றும் கூடுதல் கட்டடம், 9.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு மாற்றாக, காங்கயம், தாராபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமையும். தாராபுரம் வட்டார அரசு மருத்துவமனை, 24 கோடி ரூபாயில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது; விரைவில் திறக்கப்படும்.
காங்கயத்தில், 12 கோடி ரூபாயில் பணி நடந்து வருகிறது. அவிநாசி அரசு மருத்துவமனையில், ஐந்து கோடியில் குழந்தை நலச்சிறப்பு பிரிவு கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில் தான், 24 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பணிகள் ஒரே நேரத்தில் நடந்து, புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.
ஆய்வின் போது, கலெக்டர் கிறிஸ்துராஜ், தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி, மாநகர நகர் நல அலுவலர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
'நகர்நல மையங்கள் பணி
இந்தாண்டு நிறைவுறும்'
'திருப்பூர் மாவட்டத்துக்கு, புதிதாக, 39 நகர்நல மையம் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிக்கு, 34, தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை, திருமுருகன்பூண்டி தலா, ஒன்று வீதம், 39 இடங்கள். இவற்றில், பணி முடிந்து, கடந்த, 2023ல், மாநகராட்சி பகுதியில், 25, தாராபுரம், உடுமலை நகராட்சியில் தலா ஒரு நகர்நல மையம் திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள, 12 இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு பணி முடிக்கப்பட்டு ஒரு டாக்டர், இரண்டு செவிலியர் மற்றும் உதவியாளர் தலைமையில் இம்மையங்களும் செயல்பட துவங்கும்' என்றார் அமைச்சர் சுப்ரமணியன்.