/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மைப்பணியாளர் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் சமரசம்
/
துாய்மைப்பணியாளர் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் சமரசம்
துாய்மைப்பணியாளர் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் சமரசம்
துாய்மைப்பணியாளர் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் சமரசம்
ADDED : ஜூன் 26, 2024 10:36 PM

திருப்பூர் : முத்தரப்பு பேச்சில் சமரசம் காணப்பட்டதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும், துாய்மை பணியாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.
ஐகோர்ட் உத்தரவுப்படி, சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி,திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், நேற்றுமுன்தினம் முதல், வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில் நடந்த இந்த வேலைநிறுத்தத்தில், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி, காங்கயம், பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில் உடு மலை நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர் மற்றும் டிரைவர்கள் பங்கேற்றனர்.
நேற்றுமுன்தினம் மாலை, தொழிலாளர் உதவி கமிஷனர் தலைமையில் நடைபெற்ற முதல்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, நேற்றும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.
துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர் 200க்கும் மேற்பட்டோர், காலை, 9:00 மணி முதலே, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வரத்துவங்கினர். அனைவரும், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முதல் அலுவலகம் வரையிலான நடைபாதையில் அமர்ந்திருந்தனர்.
இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மதியம் நடந்தது. தொழிலாளர் துறைஉதவி கமிஷனர் (சமரசம்) பிரேமா தலைமை வகித் தார். மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ், பூண்டி காங்கயம், உடுமலை, வெள்ளகோவில், தாராபுரம், பல்லடம் ஆகிய ஆறு நகராட்சிகளின் கமிஷனர்கள்; துாய்மை பணியாளர் தரப்பில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
அதிகாரிகள் தந்த உத்தரவாதம்
பேச்சுவார்த்தைக்குப்பின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜ் கூறியதாவது:
ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தில், நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளருக்கு தினம் 638 ரூபாய்; குடிநீர் பணியாளர், டிரைவர்களுக்கு 715 ரூபாய்; மாநகராட்சி துாய்மை பணியாளருக்கு 753 ரூபாய்; குடிநீர் பணியாளர், டிரைவர்களுக்கு 792 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
முத்தரப்பு பேச்சில், வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி, துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், டிரைவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அனுமதி கேட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு உடனடியாக கடிதம் அனுப்புவதாகவும்; அந்த கடித நகலை எங்களுக்கு வழங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தந்த நகராட்சி, மாநகராட்சியில் அவசர கூட்டம் நடத்தி, துாய்மை பணியாளருக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் எனவும்; வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.