ADDED : மார் 07, 2025 03:46 AM
பொங்கலுார்; கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெரும் வறட்சி, தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள் காரணமாக தேங்காய் விளைச்சல் கடுமையாகச் சரிந்துள்ளது. வரத்து குறைவால் தேங்காய் விலையும் விறுவிறுவென உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேங்காய் மட்டை விலையும் உயர்ந்துள்ளது.
தேங்காய் மட்டையிலிருந்து நார் தயாரிக்கும் மட்டை மில்களுக்கு போதிய அளவு மட்டை கிடைப்பதில்லை. முன்பெல்லாம் பணத்திற்கு தாமதப்படுத்திய மட்டை மில்கள் தற்போது உடனுக்குடன் பட்டுவாடா செய்கின்றன. தேங்காய் மட்டை தோப்புகளில், ஒரு ரூபாய் 50 பைசாவுக்கு விற்கிறது. தேங்காய் மட்டைகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, அதிலிருந்து கிடைக்கும் தென்னை நார் கழிவு விலையும் உயர்ந்துள்ளது.
தென்னை நார்க் கழிவை கோழி பண்ணைகள், நாற்றுப் பண்ணைகள் போக, மண்ணில்லா விவசாயம் செய்வதற்கும் 'காயர் பித்' என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் நார்க்கழிவு விலை உயர்வால் கோழிப்பண்ணை, நாற்றுப் பண்ணையாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.