/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை, நீலகிரி மாமழை: திருப்பூருக்குப் பெரும் வரம்
/
கோவை, நீலகிரி மாமழை: திருப்பூருக்குப் பெரும் வரம்
ADDED : ஆக 04, 2024 05:25 AM

நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் பருவமழை, திருப்பூர் மாவட்ட மக்களின் தாகம் தணிப்பதோடு மட்டுமல்லாமல், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பசுமை, செழுமைக்கு காரணமாக இருக்கிறது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை, இம்முறை சரியான சமயத்தில் பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஓடை, ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து, பெருக்கெடுக்கிறது.
நீலகிரியில் பெய்யும் மழைநீர் பில்லுார் அணையில் நிரம்புகிறது; அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வழியாக கோவை, மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி, திருப்பூர் மக்களின் குடிநீர் தேவையையும், பாசனத்துக்கான நீர்த்தேவையையும் பூர்த்தி செய்கிறது.
அதே போன்று, கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் நொய்யல் ஆற்று நீர், பேரூர், கோவை, சூலுார், திருப்பூர், கொடுமணல் நகரங்கள் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது.
இந்த நதி நீரும் திருப்பூரின் நிலத்தடி நீர் வளம் பெருகவும், விவசாயத்துக்கு பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டமும் அங்குள்ள 'குளுகுளு' ஊட்டியும், வெறும் சுற்றுலா தலம் என்ற அடிப்படையில் மட்டுமே பார்த்து வந்த திருப்பூர் மக்கள், அம்மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் தான், நமக்கான உயிர்நீர் என்பதை உணர துவங்கியிருக்கின்றனர்.
செழிக்கும் நொய்யல்
கடந்த, 50 ஆண்டுகள் முன் நன்னீர் பாய்ந்த நொய்யல் ஆற்றில், சாயக்கழிவுநீர் கலந்ததால் மாசுப்பட்டது. இப்பெரும் சவாலை, பூஜ்யம் சுத்திகரிப்பு திட்டம் வாயிலாக சரி செய்தனர், திருப்பூர் தொழில் துறையினர். நொய்யல் ஆறு சார்ந்த குளம், குட்டை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தியதன் விளைவாக, நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் பெய்யும் மழையால் நொய்யல் ஆறு சார்ந்த குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன; பல குளங்கள் நிரம்பியும் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட நொய்யல் நதி தொடர்புடைய குளம், குட்டை, நீர்வழித்தடங்களை சுத்தம் செய்வதன் வாயிலாக, நொய்யல் பழைய நிலையை எட்டும். நொய்யல் நதியின் குறுக்கே உள்ள ஒரத்துப்பாளையம் அணையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
- அகில் ரத்தினசாமி, தலைவர்,
ஜீவநதி நொய்யல் சங்கம்.
பயன்தரும் பவானி
பவானி ஆற்றுநீரை சார்ந்து திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 20க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. பல லட்சக்கணக்கான மக்களின் நீர்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 2.07 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கீழ்பவானி பாசனம்; 25 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான கொடிவேரி பாசனம்; 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காலிங்கராயன் பாசனம் உட்பட, 2.48 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.
அன்னுார், அவிநாசி, திருப்பூர், பல்லடம் பகுதி மக்களின் பிரதான நீரதாரமே பவானி தான். மேலும், பவானி ஆற்றுநீரை நம்பித் தான்,1,045 குளம் குட்டைகளில் நீர்செறிவூட்டும் வகையில், 1,657 கோடி ரூபாய் மதிப்புள்ள, அத்திக்கடவு - அவிநாசி திட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழை, திருப்பூருக்கு வரம் என்று சொல்வதில் மிகையில்லை.
- சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர்,
களஞ்சியம் விவசாயிகள் சங்கம்.