/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலர் கலராக தண்ணீர்: அதிகாரிகள் 'குறட்டை'
/
கலர் கலராக தண்ணீர்: அதிகாரிகள் 'குறட்டை'
ADDED : ஜூன் 20, 2024 04:58 AM

பல்லடம் : கரைப்புதுார் ஊராட்சியில், கலர் கலராக ஆழ்துளைக் கிணற்று நீர் மாசடைந்து வருகிறது. மாதிரி எடுத்துச்சென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அபிராமி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆழ்துளை கிணற்று நீர், மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என, பல்வேறு நிறங்களில் வெளியேறி வருகிறது. முறைகேடாக இயங்கும் சில சாய ஆலைகளால், தண்ணீர் மாசடைந்து, இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அப்பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் மாறியதால், பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மறுநாளே ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தண்ணீர் மாதிரிகளை சேகரித்துச் சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மழைக்காலம் துவங்கினால் இதுபோன்ற விதிமுறைகளும் துவங்கி விடுகிறது. ஆழ்துளை கிணறுகள் மூலம் சாயக் கழிவு நீரை முறைகேடாக நிலத்துக்குள் செலுத்தி விடுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் வழக்கம்போல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அலட்சியமே, முறைகேடாக இயங்கும் சாய ஆலைகளின் விதிமீறலுக்கு காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, 'கலெக்டருடன் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளோம். இதுகுறித்து பின்னர் தெரிவிக்கிறோம்,' என்றார்.