/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்களை அலங்கரிக்கும் வண்ண ஓவியங்கள்!
/
தேர்களை அலங்கரிக்கும் வண்ண ஓவியங்கள்!
ADDED : மே 05, 2024 12:11 AM

திருப்பூர்;பாரம்பரிய வழக்கப்படி, தேர்தல்களில் பொருத்துவதற்காக, காடா துணியில் சுவாமி படங்கள் வரையும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருக்கல்யாண உற்சவம், 22, 23 மற்றும் 24 ம் தேதிகளில், தேரோட்டமும் நடைபெற உள்ளது.
வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் கூடாரம் பிரித்து, முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ளது; தொடர்ந்து, தேர் அலங்கார பணிகள் நடந்து வருகிறது. தேர்களில், சாரம் கட்டி முடித்ததும், கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட புதிய தேர் வஸ்திரம் போர்த்தப்படும்.
தேரின் மீது பீடம் அமையும் இடத்தில் உள்ள நான்கு திசைகளிலும், சுவாமி படங்கள் வைக்கப்படும். அதற்காக, மூங்கில் தட்டியில் கட்டப்பட்ட, துணியில் வரைந்த ஓவியம் பயன்படுத்தப்பட்டது. மிகவும், பழுதான காரணத்தால், கடந்தாண்டு, சுவாமி படங்கள், 'பிளக்ஸ் பேனர்' பயன்படுத்தப்பட்டது.
சுவாமி தேர்களில், பாரம்பரிய வழக்கப்படி, கெட்டியான காடா துணியில் வரையப்பட்ட வண்ண சுவாமி படங்களையே வைக்க வேண்டுமென, கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் முடிவு செய்தது. அதன்படி, மாயவரம் மற்றும் புதுவையை சேர்ந்த ஓவியக்கலைஞர்களை கொண்டு, சுவாமி படங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.
தேர்தல்களின் முன்புறம் வைக்கப்படும், துவார பாலகர்கள்; விநாயகர் - முருகர், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், கருடாழ்வார், நரசிம்மர் போன்ற ஆளுயர சுவாமி படங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை, தேர்த்திருவிழாவில் பயன்படுத்திய பின், பத்திரமாக பாதுகாத்தால், 10 ஆண்டு வரை பயன்படுத்தலாம் என, ஓவியக்கலைஞர்கள் தெரிவித்தனர்.