/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிகவியல் 'வாட்டியது': கணிதம் 'இனித்தது'
/
வணிகவியல் 'வாட்டியது': கணிதம் 'இனித்தது'
ADDED : மார் 25, 2024 11:50 PM
திருப்பூர், மார்ச் 26-
வணிகவியல் தேர்வு கடினமாகவும், கணிதம் எளிதாகவும் இருந்ததாக, பிளஸ் 1 மாணவ, மாணவியர் கருத்து கூறினர்.
மார்ச், 4ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. நேற்று, கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வு நடந்தது. விலங்கியல், 402 பேர் எழுத வேண்டும்; 396 பேர் எழுதினர். ஆறு பேர் தேர்வெழுதவில்லை. கணிதம் தேர்வெழுத, 13 ஆயிரத்து, 103 பேர் தகுதியானவர்கள்; 55 பேர் தேர்வுக்கு வரவில்லை. 13 ஆயிரத்து, 48 பேர் தேர்வெழுதினர்.
வணிகவியல் தேர்வை, 11 ஆயிரத்து, 758 பேர் எழுத வேண்டும்; 11 ஆயிரத்து, 589 பேர் தேர்வில் பங்கேற்றனர்; 169 பேர் தேர்வறைக்கு வரவில்லை.
விண்ணப்பித்த, 54 தனித்தேர்வர்கள் தேர்வுக்கு வராததால், 193 பேர் தேர்வெழுதினர். கணித தேர்வுக்கு, 23 தனித்தேர்வர் வரவில்லை. 73 பேர் தேர்வெழுதினர்
'சென்டம்' வராது!
வணிகவியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், 'எதிர்பார்த்த, முக்கியமான கேள்விகள் இடம் பெறவில்லை. ஒரு மதிப்பெண் கேள்வி புத்தகத்துக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தேர்ச்சி பெற்று விடலாம்.
ஆனால், சென்டம் எடுக்க வாய்ப்பில்லை. இரண்டு, மூன்று மதிப்பெண் இரண்டிலும் எதிர்பார்க்காத கட்டாய வினா வந்திருந்ததால் எழுத முடியவில்லை.
புத்தகத்தை முழுமையாக படித்தவர்களே தடுமாறினர். இயன்றவரை கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சித்தோம்,' என்றனர்.
கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) கவுசல்யா கூறுகையில், 'இருபது ஒரு மதிப்பெண்ணில், ஐந்து பாடங்களுக்குள் இருந்து வந்துள்ளதால், சென்டம் பெறுவது கடினம்.
வினா எண், 30, 40 கட்டாய வினாவும் பாடங்களுக்குள் இருந்து வந்து விட்டது. புத்தகத்தை முழுமையாக படித்து தேர்வெழுதியவர்கள் மட்டுமே சென்டம் பெற முடியும். மெல்ல கற்கும் மாணவர்கள் வினாத்தாள் பார்த்தவுடன் சற்று கலக்கம் அடைந்திருப்பர். மாணவர்கள் பலரும் தேர்ச்சி பெற்று விடுவர்; சென்டம் குறையும்,' என்றார்.
கணிதம் இனித்தது!
தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், ''வினாத்தாள் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த முக்கிய வினாக்கள், முந்தைய வினாத்தாள்களில் கேட்கப்பட்ட வினாக்கம் மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. மூன்றாவது 'சேப்டரில்' இருந்து வந்திருந்த கட்டாய வினா மட்டும் சற்று யோசிக்க வைத்தது. பிற கேள்விகள் எளிமையாக இருந்த நல்ல மதிப்பெண் பெற முடியும்,' என்றனர்.
பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜேஸ்வரி (கணிதம்) கூறுகையில், ''மாணவ, மாணவியர் எதிர்பார்த்த வினாக்கள் அப்படியே வந்துள்ளது. ஒரு மதிப்பெண்ணில் முழுமையாக விடையளித்தவர், கட்டாய வினா சரியாக எழுதியவர் சென்டம் பெற வாய்ப்புள்ளது. கேள்விகள் பாடங்களுக்குள் இருந்து கேட்காமல், பயிற்சி வினாக்களே இடம் பெற்றிருந்தது. மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடியும்,'' என்றனர்.

