/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செங்குளத்தை துார்வார நடவடிக்கை தேவை கழிவு நீர் கலப்பதால் கவலை
/
செங்குளத்தை துார்வார நடவடிக்கை தேவை கழிவு நீர் கலப்பதால் கவலை
செங்குளத்தை துார்வார நடவடிக்கை தேவை கழிவு நீர் கலப்பதால் கவலை
செங்குளத்தை துார்வார நடவடிக்கை தேவை கழிவு நீர் கலப்பதால் கவலை
ADDED : ஜூலை 05, 2024 02:28 AM

உடுமலை:செங்குளத்தின் நீர்தேக்க பகுதியிலுள்ள வண்டல் மண்ணை அகற்றி, கழிவு நீர் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தின் கீழ், 2,736 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இக்குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஏழு குள பாசன திட்டத்தின் கீழ், பள்ளபாளையம் அருகிலுள்ள செங்குளம் பராமரிக்கப்படுகிறது. இக்குளம், 74.84 ஏக்கர் பரப்பளவில், 10 அடி நீர் மட்ட உயரம், 12.74 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும்.
சுற்றுப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக, செங்குளம் உள்ளது.
குளத்தின் நீர் தேக்க பகுதியில், பல அடிக்கு வண்டல் மண் தேங்கியுள்ளது; இதனால், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை முழுமையாக தேக்க முடிவதில்லை.
நேரடி பாசன நிலங்களும் பாதிக்கிறது. எனவே, இந்த சீசனில், நீர் தேக்க பகுதியிலுள்ள வண்டல் மண்ணை அகற்றி, துார்வாரி முழு கொள்ளளவில் நீர் தேக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவு நீர் கலப்பு
செங்குளத்துக்கு நீர்வரத்து அளிக்கும் ஓடையில், பள்ளபாளையம் கிராமத்தின் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.
மழைக்காலத்திலும், திருமூர்த்தி அணையிலிருந்து வரும் தண்ணீரிலும், கழிவு நீர் கலந்து குளத்து நீர் மாசடைவதுடன், ஆகாயதாமரை உள்ளிட்ட செடிகளும் செழித்து வளர்கிறது.
நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துடன் ஆலோசித்து, கழிவு நீர் குளத்தில் கலக்காமல் தடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.