/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசல் குறையாது; விரிகிறது சாலை ஆக்கிரமிப்பு
/
நெரிசல் குறையாது; விரிகிறது சாலை ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 27, 2025 11:25 PM

திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த 'பஸ் பே' அமைக்கும் போலீசாரின் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரம், 'விபத்துக்கு காரணமாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்' என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூரில் அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பிரதான ரோடுகள், போக்குவரத்துக்கு அத்தியாவசியமானவையாக திகழ்கின்றன. தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவற்றில் பயணிக்கின்றன.
திருப்பூர் - அவிநாசி ரோட்டில், திருப்பூர் துவங்கி திருமுருகன்பூண்டி வரையிலான வாகன பயணம் என்பது, வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலானது. காரணம், இந்த ரோட்டில் பயணிக்கும் அரசு, தனியார் பஸ்கள் நடுரோட்டில் நின்று தான் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன; ரோட்டின் கட்டமைப்பும் அதுபோன்று தான் உள்ளது.
திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், எஸ்.ஏ.பி., - புஷ்பா உள்ளிட்ட இடங்களில் 'பஸ் பே' அமைக்கப்பட்டு, பஸ்கள் ஓரமாக நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையிலான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
அதேநேரம், திருப்பூர் - அனுப்பர்பாளையம் இடைபட்ட பல இடங்களில், ரோட்டோர ஆக்கிரமிப்பால் ரோடு 'சுருங்கி'யுள்ளது. இதுவும், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
இதேபோல், காங்கயம், தாராபுரம், பல்லடம், மங்கலம் உள்ளிட்ட ரோடுகளும் ஆக்கிரமிப்புகள் காரணமாக 'சுருங்கி'யுள்ளன. ரோட்டோர ஆக்கிரமிப்பையும் அகற்றி, நெரிசல் இல்லாத மற்றும் விபத்தில்லாத போக்குவரத்துக்கு போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.