ADDED : ஜூலை 04, 2024 05:16 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில், நாளை, (5ம் தேதி) துவங்கி, 8ம் தேதி வரை, திருப்பூர் காயத்ரி மஹாலில், பில்ட் எக்ஸ்போ 24' கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. தினமும், காலை, 9:00 மணிக்கு துவங்கி, இரவு, 10:00 மணி வரை நடக்கிறது.
இது குறித்து, கண்காட்சி சேர்மன் மோகன்ராஜ் கூறியதாவது:
இரண்டாவது ஆண்டாக கட்டுமானப் பொருள் கண்காட்சி நடத்துகிறோம். கடந்தாண்டு, 80 அரங்குகள் இருந்தன; இந்தாண்டு, 150 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 250 கோடி ரூபாய் வரை, வர்த்தக விசாரணை இருக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
வீடு, அலுவலகம், வணிக கட்டடம் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்கள் சார்ந்தும், நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ப கட்டட பொறியாளர்கள், வீடு கட்டுவோர், வீடு கட்டும் எண்ணத்துடன் இருப்போர் என, கட்டுமானப்பணி சார்ந்த அனைவரும் 'அப்டேட்' ஆக வேண்டியிருக்கிறது. அதற்காக தான் இத்தகைய கண்காட்சியை நடத்துகிறோம்.
வீடுகளின் முகப்பு கதவு துவங்கி சமையலறை வரை தேவைப்படும் கட்டுமானப் பொருட்களின் தற்போதைய வரவு வரை கண்காட்சியில் இடம் பெறும்.மழைநீரை சேகரித்து, குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என, இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம் பெறும்.
குழந்தைகள் விளையாடுவதற்கென பிரத்யேக இடம், அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு, தினமும் மாலை, கலை நிகழ்ச்சி உண்டு. துவக்க விழாவில், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மூன்றாம் மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபாலகிருஷ்ணன், கண்காட்சி செயலாளர் வேலுசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.