/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி தேவை 351 லட்சம் பேல்களாக உயர்ந்தது; புதிய பட்டியல் வெளியிட்டது சி.சி.ஐ.,
/
பருத்தி தேவை 351 லட்சம் பேல்களாக உயர்ந்தது; புதிய பட்டியல் வெளியிட்டது சி.சி.ஐ.,
பருத்தி தேவை 351 லட்சம் பேல்களாக உயர்ந்தது; புதிய பட்டியல் வெளியிட்டது சி.சி.ஐ.,
பருத்தி தேவை 351 லட்சம் பேல்களாக உயர்ந்தது; புதிய பட்டியல் வெளியிட்டது சி.சி.ஐ.,
ADDED : ஜூலை 03, 2024 02:01 AM
திருப்பூர்;இந்திய பருத்திக் கழகம் வெளியிட்ட, திருத்தியமைக்கப்பட்ட இருப்பு பட்டியலில், பருத்தி பஞ்சின் தேவை, 351 லட்சம் பேல்களாக உயருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பருத்திக்கழகம் (சி.சி.ஐ.,), பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்கிறது. அத்துடன், ஒவ்வொரு பருத்தி ஆண்டிலும், தொடக்க கையிருப்பு, பஞ்சு மகசூல், பஞ்சு இறக்குமதி என, மொத்த பஞ்சு வரத்தை கணக்கிடுகிறது.
நுாற்பாலைகளுக்கான தேவை, ஜவுளி அல்லாத பஞ்சு தேவை, பஞ்சு ஏற்றுமதி என, மொத்த தேவைகளையும் கணக்கிட்டு, இருப்பு பட்டியல் அடிப்படையில், பஞ்சு வர்த்தகம் தொடர்பான கொள்கை முடிவுகளை மேற்கொள்கிறது. பருத்தி ஆண்டு (அக்., - செப்.,) துவங்கும் முன்னதாக, இருப்பு பட்டியல் வெளியிடுகிறது.
பஞ்சு வரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான மாறுதல் ஏற்படும் போது, திருத்தியமைக்கப்பட்ட பருத்தி இருப்பு பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, கடந்த 24ம் தேதி நடந்த இந்திய பருத்திக்கழகத்தின் மேலாய்வு கூட்டத்தில், நடப்பு பருத்தி ஆண்டுக்கான புதிய இருப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு பருத்தி ஆண்டில், மொத்த வரத்து, 398 லட்சம் பேல்களாகவும் (ஒரு பேல் என்பது 170 கிலோ), மொத்த தேவை, 351 லட்சம் பேல்களாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
திருத்திய இருப்பு பட்டியலில், பருத்தி பஞ்சின் தேவை, 351 லட்சம் பேல்களாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு, 25 லட்சம் பேல்களும், ஜவுளி அல்லாத தேவைக்கு, 16 லட்சம் பேல்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. நுாற்பாலைகளின் தேவை, 307 லட்சம் பேல்களாக உயருமெனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, 47 லட்சம் பேல்கள் கையிருப்பாக பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், பருத்தி விளைச்சலும் அதிகம்; பஞ்சுக்கான தேவையும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.