/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!
/
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!
ADDED : செப் 07, 2024 11:52 PM
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று சொல்வார்கள். 'எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது ஒளவையார் வாக்கு. 'கற்க கசடற' என்பது திருவள்ளுவர் சொன்னது.
இப்படி, சங்க காலம் தொட்டே கற்றலின் அவசியம் குறித்து நம் முன்னோர் போதித்து சென்றுள்ளனர். தற்போதைய சூழலில், மத்திய, மாநில அரசுகளும் எழுத்தறிவு ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.
எழுத்தறிவை ஊக்கு விக்கும் நோக்கில் தான் ஆண்டுதோறும், ஐ.நா., சபை, செப்., 8ம் தேதியை உலக எழுத்தறிவு தினம் என, கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்து, மையப்பொருளாக முன்வைக்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டைய கருப்பொருள், 'பன்மொழிக் கல்வியை ஊக்குவித்தல்: பரஸ்பர புரிதல் மற்றும் அமைதிக்கான எழுத்தறிவு' என்பதாகும். மத்திய அரசு எழுத்தறிவு வழங்குவதில் முனைப்புக் காட்டி வருகிறது, நாடு முழுதும் கல்வி கற்காத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக, கடந்த, 2022ல், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், 2027க்குள், 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலும், இத்திட்டம் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்தது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால், ஏறத்தாழ, 2 ஆண்டுகளில் வீடுகளில் முடங்கியிருந்த பள்ளி குழந்தைகளுக்கு, எழுத்து, எண்களை மறந்து போயினர் என்பது, கல்வித்துறையை அதிர்ச்சியடைய செய்தது.
அதன் விளைவாக, 'எண்ணும், எழுத்தும்' என்ற பெயரில், கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, பொதுவான கல்வியுடன், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அடிப்படை எழுத்து மற்றும் எண்களை பயிற்றுவிக்க, பிரத்யேக ஆசிரியர் குழுவால், பிரத்யேக புத்தகமே அச்சிடப்பட்டு, கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. தற்போது, 4 மற்றும், 5ம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'எண்ணும், எழுத்தும் திட்டத்தால் ஆசிரியர்கள் சற்றே கூடுதல் பணிச்சுமை என்றாலும், மாணவ, மாணவியருக்கு பயனுள்ள திட்டம் தான்.
அடிப்படை எண், எழுத்துகளை அவர்கள் அறிந்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்தாண்டிற்குள், (2025) தமிழகத்தில் உள்ள, 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பிழையின்றி எழுத, படிக்கவும், அடிப்படை கணக்குகளை செய்வதற்கான, எண் மற்றும் எழுத்தறிவை உறுதி செய்ய வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது' என்றனர்.
(இன்று, சர்வதேச
எழுத்தறிவு தினம்)