/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம்! மழைவாழ் மக்களின் துயரம் தீரவில்லை
/
மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம்! மழைவாழ் மக்களின் துயரம் தீரவில்லை
மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம்! மழைவாழ் மக்களின் துயரம் தீரவில்லை
மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம்! மழைவாழ் மக்களின் துயரம் தீரவில்லை
ADDED : செப் 01, 2024 02:17 AM

உடுமலை;திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 6,500 பேர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து, கடந்த மூன்று நாட்களில், மூன்று பேரை மருத்துவ சிகிச்சைக்காக, தொட்டில்கட்டி, கரடு, முரடான மலைப்பாதைகளில் துாக்கி வரும் அவல நிலை ஏற்பட்டது. கடந்த, 29ம்தேதி, தைலப்புல் சேகரிக்கசென்றபோது, யானை தாக்கி படுகாயமடைந்த குருமலையை சேர்ந்த வெங்கிட்டான், 46; நேற்று முன்தினம், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஈசல்திட்டு குடியிருப்பை சேர்ந்த சடையன் மனைவி பாப்பாள், 35, நேற்று மலைச்சரிவில் விழுந்து காயமடைந்த குருமலையை சேர்ந்த, பச்சையப்பன்,45, ஆகிய மூவரையும், தொட்டில் கட்டி, 7 கி.மீ.,துாரம், துாக்கி வந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மலைவாழ் மக்கள் கூறியதாவது:
திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. வனச்சூழல் பாதிக்காத வகையில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடத்தில் மண் சாலை அமைக்கப்பட்டு, முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில், சோதனை சாவடியும் அமையும்.
இந்த ரோட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே போல், ஈசல் திட்டு குடியிருப்புக்கும் ரோடு அமைக்க அளவீடு செய்யப்பட்டது. அரசு நிதி ஒதுக்கினாலும், வனத்துறையினர் தடுப்பதால் சிக்கல் நீடிக்கிறது. ரோடு வசதியில்லாததால், அவசர மருத்துவ வசதி மட்டுமின்றி, கல்வி, குடிநீர், ரேஷன் என அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், வன உயிரினங்களால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.