/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணுக்கேற்ப பயிர் செய்யணுங்களா? பரிசோதனை செய்ய அழைப்பு
/
மண்ணுக்கேற்ப பயிர் செய்யணுங்களா? பரிசோதனை செய்ய அழைப்பு
மண்ணுக்கேற்ப பயிர் செய்யணுங்களா? பரிசோதனை செய்ய அழைப்பு
மண்ணுக்கேற்ப பயிர் செய்யணுங்களா? பரிசோதனை செய்ய அழைப்பு
ADDED : ஜூன் 14, 2024 11:56 PM

உடுமலை:மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்வு செய்யவும், உரச்செலவை குறைக்கவும், விவசாயிகள், மண் பரிசோதனை செய்வது அவசியம் என, வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டார வேளாண்துறை சார்பில், 'மண்ணுயிர் காப்போம்', திட்டத்தின் கீழ், பூளவாடி, பொன்னேரி, வடுகபாளையம், இலுப்பநகரம் மற்றும் மூங்கில்தொழுவு கிராமங்களில், மண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்வு செய்தல் மற்றும் உரச்செலவை குறைக்க, மண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
மண்ணிலுள்ள, தழை, மணி, சாம்பல் சத்து, நுண்ணுாட்டச்சத்துகளின் அளவை அறிந்து சாகுபடி செய்யவும், களர், உவர், அமிலத்தன்மையை தெரிந்து நிலத்தை சீர்படுத்தவும், பரிசோதனை உதவுகிறது.
மேலும், அங்ககச்சத்தை அறிந்து கொள்வதால், நிலத்தின் நிலையான வளத்தை பெருக்க முடியும்.
தற்போது, குடிமங்கலம் வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், மண் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
மண் மாதிரி சேகரித்து, ஆய்வுக்கு பிறகு, மண் வள அட்டையும், மேம்பாட்டுக்கான பரிந்துரையும் வழங்கப்படும். பொங்கலுார் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மண் பரிசோதனை முகாமை, தங்கள் கிராமத்தில் நடத்திட விருப்பம் இருந்தால், குறைந்தபட்சம் 30 விவசாயிகள், மண் பரிசோதனைக்கான மாதிரியை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
இது குறித்து வட்டார வேளாண்துறைக்கு தகவல் கொடுத்தால், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக அந்த கிராமத்திலேயே முகாம் நடத்தி, பரிந்துரைகள் வழங்கப்படும்.
விவசாயிகள் தங்கள் மண் வள விபரங்களை 'உழவர்' மொபைல் செயலியில், தமிழ் மண் வளம் என்ற பகுதியில், தெரிந்து கொள்ளலாம். மேலும், கடந்த கால மண் பரிசோதனை அடிப்படையில், விபர அறிக்கையும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.