/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 07, 2024 11:03 PM
உடுமலை : உடுமலை வட்டார விவசாயிகள், சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் வாழை பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் சின்ன வெங்காயம், தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பயிரிட்ட பின் ஏற்படும் பாதிப்புகளான, பயிர் வளரும் காலத்தில் ஏற்படும் வெள்ளம், நீண்ட கால வறட்சி, கடுமையான வறட்சி போன்ற, பருவ நிலை மாற்றங்களால், மகசூல், 50 சதவீதத்திற்கும் குறைவாக இருத்தல் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படும் வயலில் மகசூல் குறைபாடு ஏற்பட்டதன் அடிப்படையிலும் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், உள்ளூர் சீற்றங்கள், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் மேகவெடிப்பு, மின்னல் உள்ளிட்ட காரணங்களாலும், இயற்கையாக தீப்பிடித்தல், சூறாவளி, கன மழை மற்றும் பருவ காலத்தில் அல்லாத மழை போன்றவற்றால் ஏற்படும் இழப்புகள்,
அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் ஆகியவற்றால், விவசாயிகள் பாதிக்கப்படும் போது, தனிநபர் விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் காப்பீடு வழங்குவதற்கு இத்திட்டத்தில் வழிவகை உள்ளது.
பயிர்க் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வங்கி கிளைகள், பொது சேவை மையம் அல்லது கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம்.
உடுமலை வட்டாரத்தில், வெங்காயம் மற்றும் தக்காளி பயிர்களுக்கு உடுமலை, குறிச்சிக்கோட்டை மற்றும் வாளவாடி உள்வட்டங்கள் காப்பீடு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உள்வட்டங்களிலுள்ள அனைத்து கிராம விவசாயிகளும், தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்திருந்தால், காப்பீடு செய்து கொள்ளலாம்.
சின்ன வெங்காயத்திற்கு, ஒரு ஹெக்டேருக்கு, பிரீமியமாக, ரூ.5,502 ஆகும். இதற்கு காப்பீட்டுத் தொகையாக, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 39 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தக்காளிக்கு, ஒரு ஹெக்டேருக்கு பிரீமியம் தொகை ரூ.3,693 ஆகும். இதற்கான காப்பீடு தொகை, 73 ஆயிரத்து, 853 ரூபாய் ஆகும்.
மேலும், வாழை பயிருக்கு உடுமலை, குறிச்சிக்கோட்டை உள் வட்ட கிராமங்களிலுள்ள உள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு ஹெக்டேருக்கு பிரிமியம் தொகை, ரூ.9,684 ஆகும். காப்பீடு தொகை, 2 லட்சத்து 42 ஆயிரத்து 85 ரூபாய் ஆகும்.
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளிக்கு காப்பீடு செய்ய, ஆக., 31 கடைசி நாள் ஆகும். வாழைக்கு, செப்., 16க்குள் காப்பீடு செய்ய கொள்ளலாம்.
காப்பீடு செய்ய, ஆதார் அட்டை நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, பயிர் சாகுபடி சான்று, அடங்கல் மற்றும் உரிய பிரிமிய கட்டண தொகையுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தை அணுகலாம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.