/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசத்தின் பண்பாடு: பாக்யராஜ் நெகிழ்ச்சி
/
தேசத்தின் பண்பாடு: பாக்யராஜ் நெகிழ்ச்சி
ADDED : ஆக 04, 2024 11:24 PM

திருப்பூர் : திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) துவங்கி 30 ஆண்டுக்கும் மேலாகிறது.
இதன் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 'டி செட் தினம் 2024' என்ற விழா, 'டி செட்' மைதான வளாகத்தில் நடந்தது. விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பரிசளிப்பு விழா, முன்னாள் அறக்கட்டளை நிர்வாகிகள் கவுரவிப்பு ஆகியன நடந்தன. அறக்கட்டளை தலைவர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் துரைசாமி வரவேற்றார். துணை தலைவர் காந்திராஜன் முன்னிலை வகித்தார்.
டைரக்டர் பாக்யராஜ் பேசியதாவது: நான் பள்ளி காலத்தில், பாடங்கள் பிடிக்கிறதோ இல்லையோ, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் மிகவும் பிடிக்கும்.
எனக்குள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வர இது ஒரு வாய்ப்பாக இருந்தது.
எனது 8ம் வகுப்பு ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அங்கு செல்லும் போதெல்லாம் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெறுவேன். இதை அமெரிக்கர்கள் ஆச்சர்யமாக நோக்குகின்றனர்.
பாரிஸ் ெசல்லும் பஸ்சில் அவசரப் பயணம் மேற்கொள்ள வந்த ஒரு பெண்ணுக்கு நான் இடம் அளித்தேன். அவர் நீங்கள் இந்தியரா என்று வியந்து கேட்டார். இது தான் நம் பண்பாட்டின் வெற்றி.
குடும்பத்தில் என்னதான் ஆண் தலைவராக இருந்தாலும், உடல் வலிமை அதிகம் இருந்தாலும், மன தைரியம், எதையும் எதிர்கொள்ளும் பண்பு பெண்களுக்கு அதிகம். தாய்மையின் பெருமை உலகில் எந்த ஆணுக்கும் கிடைக்காது.
இவ்வாறு அவர் பேசினார். பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார்.