/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் அடுக்கு திட்டம் 31 வரை காலக்கெடு
/
வேளாண் அடுக்கு திட்டம் 31 வரை காலக்கெடு
ADDED : மார் 03, 2025 04:06 AM
பல்லடம் : பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதா கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு தங்கள் நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு முறையும் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகளின் பதிவு விவரங் களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விவரங்கள் உள்ளிட்டவற்றை இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களில் நடந்து வருகிறது.
ஆதார் எண் போன்றே தனித்துவமிக்க தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025---26ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
மார்ச் 31 வரை இத்திட்டத்தில் இணைய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக, வேளாண் உற்பத்தி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் கிராமங்களில், வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று, தங்களது நில உடைமை விவரங்கள், ஆதார் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை அளித்து, வேளாண் அடுக்குத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.