/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு
/
விலை உயர்ந்தும் மஞ்சள் சாகுபடி பரப்பு சரிவு
ADDED : ஜூலை 02, 2024 12:13 AM

பொங்கலுார்;ஓராண்டு பயிரான மஞ்சள் திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுார், காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யும் மஞ்சள் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. மஞ்சளுடன் சின்ன வெங்காயம் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தில் கிடைக்கும் லாபம் மஞ்சள் சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சளை சேர்த்து பயிரிடுவர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் மஞ்சள் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் மழை சரிவர செய்யாமல் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளதால் படிப்படியாக மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வந்தது.
பத்து ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மஞ்சள் விலை பழைய நிலையை எட்டி உள்ளது. ஒரு குவின்டால் அதிகபட்சமாக, 17 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது. இருந்தும் தண்ணீர் பற்றாக்குறையால் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை உயரவில்லை. தற்போது அத்தி பூத்தாற் போல ஒரு சில விவசாயிகள் மட்டுமே மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.