ADDED : ஜூன் 25, 2024 12:59 AM

திருப்பூர்;ஊத்துக்குளி தாலுகா, குன்னத்துார், காவுத்தம்பாளையத்தில், விஜயாபுரி மாகாளியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், மதில் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, பதாகைகள் ஏந்தியவாறு அப்பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்தனர்.
ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை கீழே போட்டு, ஒப்படைப்பு போராட்டம் மற்றும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறியதாவது:
காவுத்தம்பாளையம் விஜயாபுரிமாகாளியம்மன் கோவில், வாமலை கவுண்டம்பாளையம், சுக்கா கவுண்டன்புதுார், கந்தப்ப கவுண்டன் புதுார் ஆகிய மூன்று ஊர் பொதுமக்களுக்கு குலதெய்வமாக உள்ளது. 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாங்கல்ய கூட்டு வரி கொடுத்து வருகிறோம்.
ஆகம விதிப்படி, மூன்று சுவாமி சிலைகளை மட்டும் கோவில் சுற்றுச்சுவருக்கு வெளியே பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, புதிய கோவில் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
மூன்று சுவாமி சிலைகளை வெளியே வைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, சிலர், கோவில் மதில் சுவரை இடித்து, சேதப்படுத்திவிட்டனர். அறநிலையத்துறை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.
சுவாமி சிலைகளை கோவில் சுவருக்கு வெளியே பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.