/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீரிழிவு நோய்: அடிப்படைக் காரணம் என்ன?
/
நீரிழிவு நோய்: அடிப்படைக் காரணம் என்ன?
ADDED : ஜூன் 30, 2024 09:07 PM
இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.
நீரிழிவு நிபுணர்கள் கூறியதாவது:
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் பலருக்கும் இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.
சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய 'நண்பர்கள்'. சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு
இயல்பு மாறும்
உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது.
அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.
உயர் ரத்த அழுத்தம்
மன அழுத்தம்
நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.
கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.