ADDED : ஜூன் 24, 2024 01:34 AM

திருப்பூர்;திருப்பூர், பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் உள்ளது. சனிக்கிழமை இரவே மார்க்கெட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் ஆட்டோ, வேன் நிறுத்தி வைக்கப்படுகிறது. கிடைக்கும் இடங்களில் எல்லாம் தள்ளுவண்டிக்காரர்கள், கடைவிரிக்கின்றனர்.
ஞாயிறு அதிகாலை முதல் வரும் வாகனங்கள் நிறுத்த இடமின்றி, வழியை மறித்து நிறுத்தப்படுகின்றன. காலை 8:00 மணிக்கு பின் வரும் வாகனங்கள் உள்ளே நுழைய முடிவதில்லை. மீன் மார்க்கெட் செல்லும் வழியில், ஒரு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வழிநெடுகிலும் காத்திருந்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
காய்கறி, மீன் வியாபாரிகள் கூறுகையில், ''வாகனங்கள் நுழைவதே சிரமமாக இருப்பதால், மக்கள் பலர் உள்ளே வராமல் திரும்பி விடுகின்றனர்; வியாபாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. போக்கு வரத்து ஒழுங்குப்படுத்த, பார்க்கிங் முறைப்படுத்த மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் முன்வர வேண்டும்,' என்றனர்.
முன்பு, மார்க்கெட்டுக்குள் செல்வதும், வாகனங்கள் வெளியேறுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது; நெரிசல் தவிர்க்கப்பட்டது. தற்போது பார்க்கிங் அவரவர் சவுகரியமாகி விட்டதால் தான், நேற்று நெரிசல் அதிகமானது.