/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முறைகேடு' மின் இணைப்புகள் துண்டிப்பு
/
'முறைகேடு' மின் இணைப்புகள் துண்டிப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:20 PM
திருப்பூர்;திருப்பூரில், தற்காலிக மின் இணைப்பில் விதிமீறல் கண்டறியப்பட்டதால், முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் மின் கோட்டத்தில், தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி, மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். முறைகேடாக தற்காலிக மின் இணைப்பு வழங்குவது கண்டறியப்பட்டு, பிரிட்ஜ்வே காலனி உட்பட, பல்வேறு இடங்களில், 10க்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான வீடு கட்டும் பணிகளுக்கு மட்டும், குறைவான டிபாசிட் தொகைக்கு தற்காலிகமாக இணைப்பு வழங்கப்படுகிறது; இதர இணைப்புகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டிபாசிட் செலுத்த வேண்டும்.
கட்டுமான பணி துவங்கும் முன், வீடு கட்டுவதாக கூறி, தற்காலிக மின் இணைப்பு பெற்று முறைகேடு செய்து வருவதாகவும், திருப்பூர் கோட்டத்தில் மட்டம், 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மின்வாரிய அலுவலர்கள் நடத்திய கள ஆய்வில், புகார் தெரிவித்திருந்தபடி, முறைகேடாக தற்காலிக இணைப்பு வழங்கியது தெரியவந்துள்ளது. அதன்படி, பல்வேறு இடங்களில், 10 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
--