/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலக்கடலையில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் துறை அறிவிப்பு
/
நிலக்கடலையில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் துறை அறிவிப்பு
நிலக்கடலையில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் துறை அறிவிப்பு
நிலக்கடலையில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்தும் வழிமுறை வேளாண் துறை அறிவிப்பு
ADDED : பிப் 27, 2025 08:50 PM
உடுமலை; நிலக்கடலை சாகுபடியில், வேர் அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, வேளாண் துறை அறிவித்துள்ளது.
உடுமலை பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், அவற்றை தாக்கும் வேர் அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் தாக்குதல் அறிகுறிகளாக, இளவயது செடிகளை அதிகம் தாக்கும். இலைகள் மஞ்சள் நிறமாகி, ஓரிரு நாட்களில் செடிகள் மடிந்து விடுவதும், மிகச் சிறிய செடியில் கரும்பழுப்பு புள்ளிகள் தோன்றி சில தினங்களில் செடிகள் கருகிவிடும்.
இந்நோய் தாக்கப்பட்ட செடிகளில், வெண்மை கலந்த சாம்பல் நிற பஞ்சு வளர்வதையும், செடியின் வேர்கள் நார், நாராகக்கிழிந்தும் காணப்படும். காய்களில் தாக்குதல் உள்ளதா என்பதை, காயை உடைத்தால், கருப்பு வண்ணத்தில் பூசணங்கள் ஒட்டிக்கொண்டு பருப்பு வளர்ச்சினை தடுத்துவிடும்.
இந்நோயை கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சைக் கொல்லி, 10 கிராம், ஒரு கிலோ விதை, அரிசி வடி கஞ்சி, 200 மில்லியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
விதைப்பின் போது, அடியுரமாக, 2 கிலோ டிரைக்கோடெர்மாவினை, 25 கிலோ மக்கிய எருவுடன் கலந்து விதைக்க வேண்டும்.
வயலில் தொழு உரம், கம்போஸ்ட் போன்றவற்றை இட்டு மண்ணால் அங்கச் சத்தினை அதிகரித்தால் நல்ல வளர்ச்சி மற்றும் மகசூல் கிடைக்கும்.
இலைப்புள்ளி நோய்
நிலக்கடலை சாகுபடியில் விதைத்த, 30 நாட்களுக்கு இலைப்புள்ளி நோய் தாக்குதலை காணலாம். முதலில் இலையில் கருமை நிற சிறிய வட்ட வடிவ புள்ளிகள் தோன்றும்.
நாளடைவில் விரிவடைந்து இலையின் முக்கால் பாகத்திற்கு காணலாம். மேலும் இலைக்காம்பு, தண்டு, பூவின் காம்பு போன்ற பகுதியிலும் இதன் தாக்குதலைக்காணலாம்.
இந்த நோயின் தாக்குதல் பூக்கும் பருவத்திலிருந்து, அறுவடை வரை அதிகமாகக் காணப்படும். நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்.
நோய்த்தாக்குதல் பூவின் காம்பில் தோன்றினால், காய் வெடிப்பது குறைந்து விடும். இவற்றை கட்டுப்படுத்த, டைத்தேன் எம்-45 மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.50 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர் மார்க்கண்டன், 98949 36328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளனர்.