/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
/
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
ADDED : ஜூலை 18, 2024 12:07 AM

திருப்பூர் : அபரிமிதமான, மின்சார நிலை கட்டண உயர்வால், நலிவு நிலையில் இருந்த பனியன் தொழில் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டது. இனியும், தொழில் நடத்த முடியாது என்று போராட்டத்தில் குதித்தனர். இருப்பினும், தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
எட்டு கட்ட போராட்டத்துக்கு பிறகு, லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என, முதல்வர் உறுதி அளித்திருந்தார். அதற்கு பிறகு, மீண்டும் 3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், ஒட்டுமொத்த குறு, சிறு தொழில் நடத்துவோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
அபரிமிதமான மின் கட்டண உயர்வுக்கு பிறகும், மின் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து, எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற மக்கள் பிரதிநிதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பதால், தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெரிய சவால்
திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன்: பனியன் தொழிலுக்கு, மின் கட்டண உயர்வு என்பது மிகவும் சவாலாக மாறியுள்ளது. இதேநிலை நீடித்தால், பனியன் தொழில் வேறு மாநிலங்களுக்கு நகர்ந்து விடும். வடமாநிலங்களில், அதிகபட்ச மின் கட்டண சலுகையுடன் தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றனர். திருப்பூர் பனியன் தொழில், இடம்பெயர்ந்து விடும் அபாயம் உள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கையை கேட்டு, மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
தடுமாறுகிறது
திருப்பூர் 'பவர் டேபிள்' உரிமையாளர் சங்க செயலாளர் முருகேசன்: குறு, சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன; ஏற்கனவே, சுமக்க முடியாத அளவுக்கு கட்டணம் அபரிமிதமாக உயர்ந்துவிட்டது. பனியன் தொழில் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது கவலை அளிக்கிறது. திருப்பூரின் பாதிப்புகளை உணர்ந்து, பனியன் தொழிலை பாதுகாக்க, தமிழக முதல்கர் கருணை காட்ட வேண்டும்.
வாபஸ் பெறணும்!
'டீசா' சங்க தலைவர் சுரேஷ்பாபு: தொழில் முனைவோர், இரண்டு ஆண்டுகளாக, மின் கட்டணத்தை குறைக்க போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுளி அளித்தார் முதல்வர். மாறாக, மின் கட்டணம், மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வால், போட்டியை சமாளிக்க முடியாத அளவுக்கு தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால், உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது; வாழ்வாதார பிரச்னையாக இருப்பதால், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
சலுகை வேண்டும்
திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் அசோசியேஷன் தலைவர் கோபால கிருஷ்ணன்: கொரோனாவுக்கு பின், பல்வேறு சவால்களை சந்தித்து வந்த பனியன் தொழில், தற்போதுதான், இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
பலகட்ட பிரச்னைகளில், மின் கட்டண உயர்வும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 4.8 சதவீதம் உயர்த்தியிருப்பது, மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்; குறு, சிறு தொழில்களுக்கு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.
இல்லாதபட்சத்தில், தொழில்கள் மறைந்துவிடும்; தமிழக அரசு, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.