/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான்! கடைவீதிகளில் அலைமோதும் மக்கள்; எச்சரிக்கை விடுக்கும் போலீசார்
/
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான்! கடைவீதிகளில் அலைமோதும் மக்கள்; எச்சரிக்கை விடுக்கும் போலீசார்
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான்! கடைவீதிகளில் அலைமோதும் மக்கள்; எச்சரிக்கை விடுக்கும் போலீசார்
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான்! கடைவீதிகளில் அலைமோதும் மக்கள்; எச்சரிக்கை விடுக்கும் போலீசார்
UPDATED : அக் 28, 2024 06:47 AM
ADDED : அக் 28, 2024 12:34 AM

உடுமலை, பொள்ளாச்சியில், தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகியுள்ளனர். இதனால், கடைவீதிகள் 'களை' கட்டியுள்ளன.
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி, நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால், குதுாகலத்துடன் பண்டிகையை கொண்டாட தயாராகியுள்ளனர் மக்கள்.
ஞாயிறு விடுமுறையில் வெறிச்சோடி காணப்படும் வணிக வளாக வீதிகள், நேற்று மக்கள் கூட்டத்தால் 'களை' கட்டின.
பெரிய வணிக வளாகங்களின் வாசல்களில், சிறு கடைகளிலும் தீபாவளி வியாபாரம் தீவிரமாய் நடக்கிறது. வ.உ.சி., வீதி, சீனிவாசா வீதி, பசுபதி வீதி, கல்பனா ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
வண்ண மயமாய், பலவித வடிவங்களில் வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் மாதிரி பட்டாசுகள், குழந்தைகளை கவர்ந்தது.
நெரிசல் நிறைந்த பகுதிகளில், வாகனங்கள் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க, வீதிகளின் முடிவுகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனங்கள் நுழையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்புக்கு கூட்டம் நிறைந்த இடங்களில், போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி என்றவுடன் புத்தாடை, பட்டாசுக்கு அடுத்ததாக பலகாரமும் எளிதில் நினைவை எட்டிவிடும். ஆடைகளுக்கு மட்டுமில்லாமல், பலகாரங்களுக்கும் தள்ளுபடி வழங்கி, மக்களின் கவனத்தை ஈர்த்தன.
புதுவிதமான புத்தாடைகள்
புதுவிதமான ரகங்களில் புதிய வடிவமைப்புகளில் ஆடைகள் விற்பனைக்கு வருகின்றன. சமீபத்தில் வெளியாகியிருக்கும் படங்களின் ஹீரோயின்கள் அணிந்திருந்த ஆடை போல் கேட்பதும், சீரியல் கதாபாத்திரங்கள் பெயர்களிலும் ஆடைகள் அதிகமாக விற்பனையாகின.
ஆடை கடைகளின் வெளியில், அதற்கு ஏற்ப, 'மேட்ச்' செய்து வாங்கிக்கொள்ளும், படி, அணிகலன்களின் விற்பனையும் நடக்கிறது.
உஷாரய்யா உஷாரு
தீபாவளி 'பர்சேசில்' தீவிரம் காட்டி, கையில் வைத்திருக்கும் பைகளையும், உடமைகளிலிருந்தும் கவனத்தை சிதறவிட்டுவிடாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலாக இருக்கும் பகுதிகளில், குழந்தைகளை கண்காணித்துக்கொள்ள வேண்டும். கடைகளில், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவோர், தவறாமல் அதனை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து, மக்களுக்கு அங்காங்கே பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
போலீசார் அறிவுரை
நகரில், கடைவீதிகளில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேக ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், போலீசார் ஒலிபெருக்கிகள் வாயிலாகவும் அறிவுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி நகரில் உள்ள முக்கிய வீதிகளில், பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால், கடைவீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.
கடை வீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் நின்று பைனாகுலர் வாயிலாக பொதுமக்கள் கூட்டத்தை காண்காணித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சந்தேகப்படும்படியான ஆசாமிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் போலீசார் ஒலிபெருக்கிகள் வாயிலாகவும் அறிவுறுத்தியும் வருகின்றனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக, போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சாதாரண உடைகளில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கண்காணித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில், 'நெரிசல் அதிகரிக்கும் பகுதியில், இரண்டு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கத்தை தடுக்க போலீசார், கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்,' என்றனர்.
வால்பாறை
தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளான நேற்று. தீபாவளி பண்டிகையை கோலகலமாக கொண்டாட, புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்க, எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறையில் உள்ள கடைகளில் திரண்டனர்.
பொருட்களை வாங்க மக்கள் அதிக அளவில் வாகனங்களில் வந்ததால், நகரில் இடையிடையே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- நிருபர் குழு -