ADDED : பிப் 26, 2025 11:44 PM
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே உள்ள இறைச்சிக் கடைகள், மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரம் முளைக்கும் 'பாஸ்ட் புட்' கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் உணவுக்கழிவுகளை தான், தெரு நாய்கள் உண்கின்றன.
இறைச்சிக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், திறந்தவெளியில் சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களை ஒட்டிய பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
இவற்றை தெரு நாய்கள் உண்பதால், அவற்றின் சுபாவமும் மாறுகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இறைச்சிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்; ஆனால், இத்திட்டம் நடைமுறையில் இல்லை. தங்கள் எல்லையில் உள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து வெளியேற்றும் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துகின்றனர், விதிமுறைக்கு உட்பட்டு அகற்றப்படுகிறதா என்பதை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.