/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீதியெங்கும் நாய்கள்; நடந்து செல்லவே நடுக்கம்!
/
வீதியெங்கும் நாய்கள்; நடந்து செல்லவே நடுக்கம்!
ADDED : ஆக 04, 2024 05:11 AM
'பெருகிவிட்ட தெரு நாய்களின் அச்சுறுத்தலும், தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏ.பி.சி., திட்டம் (விலங்கு பிறப்பு கட்டுப்பாடு) மட்டுமே தீர்வாக அமையும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், இதுதொடர்பாக, உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூரில், வீதிகள், பிரதான சாலைகளில் தெருநாய்கள் நடமாட்டம் என்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர், டூவீலரில் செல்வோரை விரட்டி கடிக்க முற்படுகின்றன. தெரு நாய் தொல்லை என்பது, உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது, மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தெருநாய்களை கொல்ல சட்டத்தில் அனுமதியில்லை; மாறாக, 'ஏ.பி.சி.,' எனப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை மட்டுமே செய்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில், மாநகராட்சி பகுதியில் மட்டுமே தெரு நாய்களுக்கு, தனியார் அறக்கட்டளை உதவியுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை தொடர்பான புகார், தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.ஏட்டு சுரைக்காய்கறிக்கு உதவாது
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா:
பள்ளி சிறுவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் தெருநாய் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் வாயிலாக கூட, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, 'நாய்களை பிடித்தோம்; சரணலாயத்தில் அடைத்தோம்; கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம்' என, வெறுமனே அறிவிப்பு வெளியிடுவதால் மட்டும் பலனில்லை; நாய்களை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
70 சதவீதம்
கட்டுப்படுத்தலாம்
திருப்பூர் கால்நடை மருத்துவமனை பிரதம மருத்துவர் பரிமளராஜ்குமார்:
சமீபத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே, அவற்றை கட்டுப்படுத்த ஒரே வழி. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்; தற்போது திருப்பூர் மாநகராட்சியில் கருத்தடை அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. பிற இடங்களிலும் அறுவை சிகிச்சை பணி, தொடர்ச்சியாக மேற்கொண்டால், ஓராண்டில், 70 சதவீதம் அளவுக்கு தெருநாய்களை கட்டுப்படுத்த முடியும்.