சம்பல் பள்ளத்தாக்கின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்த மனோஜ்குமார் சர்மா, சக மாணவர்களுடன் சேர்ந்து தானும் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைகிறார்.
நேர்மையான காவல்துறை அதிகாரி துஷ்யன்சிங்கின் மந்திர வார்த்தைகள், இவரது வாழ்வைப் புரட்டுகிறது. லட்சக்கணக்கில் போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர் மத்தியில், கனவுகளைச் சுமந்துகொண்டு டெல்லி செல்கிறார் மனோஜ்குமார்; வறுமை, நெருக்கடிகள் ஒருபுறம்; நம்பிக்கை விளக்கோ அணையவில்லை.
இறுதியில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக எவ்வாறு உருவானார் என்பதுதான் 'பிளஸ் 2 பெயில்' என்ற படத்தின் கதை; கதையல்ல நிஜம். நிஜக்கதையே விது வினோத் சோப்ராவின் இயக்கத்தில், திரைப்படமாக வெளிவந்தது.
சோர்வடைய வேண்டாம்: பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. ஒருவேளை வெற்றிக்கான வாய்ப்பைத் தவறவிடும் மாணவ, மாணவியர் மனதில் கவலைகள் சூழலாம். ஏதேனும் ஒரு பாடமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களிலோ தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ, சோர்வடைவதற்கு ஒன்றுமே இல்லை. வெற்றிக்கான அத்தியாயத்தைத் துவங்குகிறோம் என்று பொருள் கொள்ளலாம்.
பிரபஞ்சம் விரிந்து பரந்தது. கல்வி என்பது குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாததால் நம்மை கைவிட்டுப்போகிறது என்ற எண்ணமும் தேவையில்லை.
தோல்வி துரத்தினாலும்கூட, கல்வியை நாம் துரத்துவதில் தவறில்லை. 'படிப்பை மட்டும் நம்மகிட்டேர்ந்து எடுத்துக்கிறவே முடியாது சிதம்பரம்... அவங்கள எதிர்த்து நீ ஜெயிக்கணும்னு நெனச்சா படி' என்று 'அசுரன்' படத்தில் மகனுக்குத் தந்தையின் அறிவுரையாக படத்தில் வரும் வசனம் நிஜமானது.
பள்ளத்தாக்கில் இருந்து பனிமலையின் உச்சியை அடைவது எளிதானதல்லதான்; ஆனால், அது சாத்தியம்தான் என்பதை மனோஜ்குமார் சர்மாவின் உண்மைக்கதை உணர்த்துகிறது.
வெற்றி என்பது பெற்றுக்கொள்வது; தோல்வி என்பது கற்றுக்கொள்வது; முதலில் கற்றுக்கொள்வோம்; பின் பெற்றுக்கொள்வோம்.
தோல்விக்கு வேறு யாரையும் காரணம் காட்டத் தேவையில்லை. ஒருநாள் வெற்றி பெறப்போவது உறுதி; அந்த வெற்றிக்கு நாம் பெற்ற தோல்விதான் காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
தோல்வியுற்றவர்கள் விடக்கூடாதது, விடாமுயற்சி; விடாமுயற்சியால் எதையும் வென்று முடிக்கலாம்.
''வெற்றி என்பது இறுதியானதல்ல; தோல்வி என்பது மரணமும் அல்ல; தொடரும் துணிவுதான் முக்கியம் என்று கூறுகிறார்,- பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
''பெரிய அளவில் தோல்வியடையத் துணிபவர்களால் மட்டுமே எப்போதும் பெரிய அளவில் சாதிக்க முடியும்'' என்று நம்புகிறார், முன்னாள் அமெரிக்க அதிபர் ராபர்ட் கென்னடி.
தைரியத்தின் முதல் வெற்றி, தோல்வியில் துவளாமல் இருப்பதுதான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
தோல்வி என்பது வீழ்வதில் இல்லை; வீழ்ந்தபின் எழாமல் இருப்பதே.
பிளஸ் 2 தேர்வில் சாதிக்காதவர்கள் பலர், பின்னாளில் பெரும் முனைப்புடன் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், உயர் பதவிகளைப் பெற்றவர்களாகவும் ஜொலித்திருக்கின்றனர். வயதும் இருக்கிறது; வாய்ப்புகள் காத்திருக்கிறது, மாணவர்களே!