/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட் தேர்வில் விடையளிக்க அவசரம் கூடாது'
/
'நீட் தேர்வில் விடையளிக்க அவசரம் கூடாது'
ADDED : மே 02, 2024 11:21 PM
உடுமலை:''நீட் தேர்வில் வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து, புரிந்து, அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து, எழுத வேண்டும்; அவசரம் கூடாது,'' என, மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மொத்தம், 200 வினாக்கள் கேட்கப்படும்; இதில், இயற்பியல் - 50, வேதியியல் - 50, தாவரவியல் - 50 மற்றும் விலங்கியல் - 50 என அமைந்திருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் பகுதி 'ஏ' மற்றும் பகுதி 'பி' என இரண்டு வகை இருக்கும்.
'ஏ' பகுதியில் கேட்கப்படும், 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். 'பி' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள, 15 வினாக்களில் ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளித்தால் போதும். ஐந்து வினாக்கள் சாய்ஸ். ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'பி' பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் திறனறி வினாக்களாக இருக்கும். எனவே மிகவும் கவனமாக, இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள, 200 வினாக்களில், 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும், நான்கு மதிப்பெண் வீதம் மொத்தம், 720 மதிப்பெண் கணக்கிடப்படும்.
'நீட்' தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு வினாவும், ஒவ்வொரு வகையாக இருக்கும். தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து, புரிந்து, அதன் பின் சரியான விடையை தேர்வு செய்து, எழுத வேண்டும்; அவசரம் கூடாது.
ஓ.எம்.ஆர்.சீட்டில் விடையை ஒருமுறை குறித்த பின், மாற்றம் செய்யவே கூடாது. முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு, பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும். அதிக மதிப்பெண் பெற, உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த, தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடையளியுங்கள். இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடையளித்தால் மட்டுமே, 600 மதிப்பெண்களுக்கு மேலான மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை, மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, சுரேஷ் தெரிவித்தார்.