/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாய்க்கால் மீட்பு; மூளிக்குளத்துக்கு தண்ணீர்
/
வாய்க்கால் மீட்பு; மூளிக்குளத்துக்கு தண்ணீர்
ADDED : ஆக 08, 2024 12:12 AM
திருப்பூர்: திருப்பூர், மூளிக்குளம் மொத்தம், 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த குளத்துக்கு, 2.50 கி.மீ., தொலைவில் உள்ள, அணைக்காடு தடுப்பணையில் இருந்து, வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மாநகராட்சி பணிகள், நெடுஞ்சாலைத்துறை ரோடு பணி என, பல்வேறு பணிகள் காரணமாக, வழங்கு வாய்க்கால் அடைபட்டது. இதனால், குளத்துக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது. குளத்திலும், துாய்மை பணி மற்றும் துார்வாரும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி ஒருங்கிணைப்புடன், பணிகளை விரைந்து முடித்து, வாய்க்கால் மீட்டெடுக்கும் பணி துவங்கியது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அறக்கட்டளை நிதி உதவியுடன், வழங்கு வாய்க்கால் துார்வாரும் பணி,கடந்த 10 நாளாக நடந்தது. சாக்கடை கால்வாய் குறுக்கிட்ட பகுதிகளில், சிமென்ட் குழாய் பதித்து கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டது. வாய்க்காலில் மண்மேடாக இருந்த பகுதிகளில் துார்வாரப்பட்டது.
வேர்கள் அமைப்பினரின் இடைவிடாத முயற்சியால், மூளிக்குளத்துக்கு, கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஒருவாரத்துக்கு மேலாக, நொய்யலில் சென்ற மழை வெள்ளம் குறைந்துவிட்டது. இருப்பினும், அணைக்காடு தடுப்பணையில் இருந்து, வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்கிறது.
நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அறக்கட்டளை நிதியுதவியால், இரவு பகலாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் தயாராக இருப்பதால், நொய்யல் ஆற்றில் அடுத்த வெள்ளம் வரும்போது, குளத்துக்கு சுத்தமான தண்ணீரை கொண்டு சென்று நிரப்ப முடியும் என, வேர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.