/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணம் படைத்தவருக்கு பயன்படும் குடிநீர் திட்டம்; முற்றுகையிட்டு பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் 'காட்டம்'
/
பணம் படைத்தவருக்கு பயன்படும் குடிநீர் திட்டம்; முற்றுகையிட்டு பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் 'காட்டம்'
பணம் படைத்தவருக்கு பயன்படும் குடிநீர் திட்டம்; முற்றுகையிட்டு பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் 'காட்டம்'
பணம் படைத்தவருக்கு பயன்படும் குடிநீர் திட்டம்; முற்றுகையிட்டு பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் 'காட்டம்'
ADDED : மார் 04, 2025 06:36 AM

பல்லடம்; பணம் படைத்தவர்கள் பயன்படுத்த மட்டுமே குடிநீர் திட்டமா? என, கரைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம் கிராமத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வினி யோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ், பொதுமக்களுடனான அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
நடராஜன் (முன்னாள் எம்.எல்.ஏ.,): கடந்த காலத்தில், கரைப்புதுார் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ஒரு லிட்., 25 பைசா என்ற அடிப்படையில் எல்.அண்.டி., தண்ணீர் வாங்கப்பட்டது. பல்வேறு முயற்சிகளால் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த போதும், இன்று பொதுமக்களுக்கு தண்ணீர் இல்லை. ஆனால், தனி நபருக்கு இலவசமாக எல்.அண்.டி., தண்ணீர் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் பணம் படைத்தவர்களுக்காக பயன்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
முருகதாஸ் (காங்., இலக்கிய அணி மாநில பொதுச் செயலாளர்): குடிநீர் இணைப்பு தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு, ரசீதையும் வைத்துக் கொண்டுள்ளனர். இணைப்பும் வழங்காமல், குடிநீரும் விநியோகிக்காமல் இருந்தால் எப்படி? அதிலும், 8 ஆயிரம் ரூபாய் வசூலித்து விட்டு, 1,200 ரூபாய்க்கு மட்டுமே ரசீது தருகின்றனர். அருள்புரத்தில் பயன்பட்டு வந்த எல்.அண்.டி., தண்ணீர் வேண்டாம் என்று கூறி நிரந்தரமாக நிறுத்திவிட்டனர்.
பாலசுப்பிரமணியம் (ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர்): ஊராட்சியில், 300 இணைப்புகளுக்கு மேல் முறைகேடாக உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களும் இதில் உள்ளனர். தவறு செய்பவர்கள் மட்டுமின்றி, உண்மையில் இணைப்பு தேவைப்படுபவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மகேஷ் (வக்கீல்): 300க்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு மேல் உள்ளதாக கூறப்படுமானால், சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். இதில் அரசியல் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறைப்படி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு, பி.டி.ஓ., கனகராஜ் பதில ளித்து பேசுகையில், ''இன்று (நேற்று) காலையிலேயே, குடிநீர் பிரச்னை தொடர்பாக ஊராட்சி செயலர்களுடன் ஆலோசித்துள்ளேன். உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஓரிரு தினங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.
இதனை கேட்டு, சமாதானம் அடைந்த பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.