/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம்: கமிஷனர் ஆலோசனை
/
குடிநீர் வினியோகம்: கமிஷனர் ஆலோசனை
ADDED : மே 11, 2024 12:34 AM
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில், 4வது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில், குடியிருப்பு பகுதிகளில் வினியோக குழாய்கள் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
இதேபோல், 'அம்ரூத்' திட்டத்தில் செயல்படுத்தப்படும், பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி, வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளின் போது, அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், பணியாற்றும் ஊழியர்கள் இடையே உரிய ஒருங்கிணைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.
பணியை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் அப்பணியை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்ததால், அந்நிறுவனங்கள் களப்பணியில் நேரடியாக ஈடுபடாமல் சப்-கான்ட்ராக்ட் முறையில் வேறு நபர்களிடம் ஒப்படைத்தும் பணிகள் தாறுமாறாக நடக்கிறது.
இப்பணிகளின் போது ஏதாவது குறைபாடு கண்டறியப்பட்டால், மூன்று நபர்களும் தங்களுக்கு இதில் பொறுப்பில்லை என்று மெத்தனமாக செயல்படுகின்றனர். பெரும்பாலான பணிகள் நடக்கும் இடங்களில் மாநகராட்சி தரப்பில் அலுவலர்கள் சென்று பார்வையிடுவது, பணி நிலை குறித்து அறிக்கை அளிப்பது போன்ற பணிகளும் முறையாக நடப்பதில்லை.
இதுபோன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகளில் குறைபாடுகளும், தேவையற்ற தாமதம், நிதி வீணடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இதுதவிர, பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுவதும், அதிருப்தி ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாக உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக குடிநீர் திட்டப் பணி, பாதாள சாக்கடை திட்டப் பணி, குடிநீர் வினியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் உடன் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆலோசனை நடத்தினார்.
குடிநீர் சப்ளையில், தற்போதுள்ள நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கோடை காலம் மற்றும் குடிநீர் திட்டங்களில் பெறப்படும் நீர் அளவும் குறைவாக உள்ள நிலையில், தட்டுப்பாடு இல்லாத வகையில் அனைத்து பகுதிகளுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
குழாய் பதிப்பு பணிகளின் போது, உடனுக்குடன் குழிகள் முறையாக மூடப்பட வேண்டும். குழி தோண்டும் பணியின் போது, ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள குழாய்கள், கேபிள்கள் ஆகியன சேதமடையாமல் பணியாற்ற வேண்டும். உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றி பணிகள் நடப்பதை உரிய அலுவலர்கள் முறையாக நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.