/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ட்ராங் ரூம்களில் ஓட்டு இயந்திரங்கள்
/
ஸ்ட்ராங் ரூம்களில் ஓட்டு இயந்திரங்கள்
ADDED : ஜூன் 05, 2024 11:22 PM

திருப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவடைந்ததையடுத்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையங்களிலிருந்து எடுக்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிக்கான ஸ்ட்ராங் ரூம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டு விவரங்கள், பாதுகாக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. எட்டு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஸ்ட்ராங் ரூமில் வைத்து பாதுகாக்கப்பட்டுவருகிறது.
லோக்சபா தேர்தலுக்காக, கடந்த மார்ச் மாதம், மாவட்ட ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வி.வி., பேட் உள்ளடக்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன. எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இயந்திரங்களும் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டது. அவை, கடந்த ஏப்ரல் 19ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன.
ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டன.
எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில்...
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மைய ஸ்ட்ராங் ரூமில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடந்தது. கன்ட்ரோல் யூனிட்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லோக்சபா தேர்தல் திருவிழா, இனிதே நிறைவடைந்துள்ளது.
மீண்டும் சட்டசபைதொகுதிக்கு
தேர்தலில் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து எடுக்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கான 2,580 வி.வி.பேட்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியிலிருந்து எடுக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, மாவட்ட ஸ்ட்ராங் ரூமுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், குமரன் ரோட்டிலுள்ள சப்கலெக்டர் அலுவலக ஸ்ட்ராங் ரூமுக்கும்; திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், கே.பி.என்., காலனி சமுதாய நலக்கூடத்திலும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் இருந்து, ஈரோடு மாவட்ட ஸ்ட்ராங் ரூமுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
மாவட்டத்தில்5 லோக்சபா தொகுதி
திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து லோக்சபா தொகுதிகள் உள்ளன. கோவை ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து பல்லடத்துக்கு; பொள்ளாச்சியிலிருந்து உடுமலைக்கும்; நீலகிரியிலிருந்து அவிநாசிக்கும்; ஈரோட்டிலிருந்து காங்கயம், தாராபுரத்துக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திரும்புகின்றன.
கன்ட்ரோல் யூனிட்டில் பதிவான ஓட்டு விவரங்கள்; வி.வி., பேட்டினுள் ஓட்டு பதிவு செய்த துண்டுச்சீட்டு ஆகியவை, அகற்றப்படாமல் பாதுகாக்கப்படும். தேர்தல் கமிஷனின் உத்தரவுக்குப்பின், அந்தந்த சட்டசபை தொகுதி ஸ்ட்ராங் ரூம்களில் இருந்து, மாவட்ட ஸ்ட்ராங்ரூமுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.