/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்போர் விபரங்களை விரைந்து வழங்குங்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
/
கற்போர் விபரங்களை விரைந்து வழங்குங்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
கற்போர் விபரங்களை விரைந்து வழங்குங்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
கற்போர் விபரங்களை விரைந்து வழங்குங்க ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : மே 23, 2024 11:19 PM
உடுமலை;புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கற்போர் குறித்த விபரங்களை மே இறுதிக்குள் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும், 15 வயதுக்கும் மேற்பட்ட அடிப்படை கல்வி கற்காத, எழுதப்படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கற்றலை கற்பிக்க, 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மையமாகக்கொண்டு, பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கற்போரை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க, தன்னார்வலர்களையும் ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளில், இவ்வாறு அடிப்படை கல்வியறிவு இல்லாதவர்கள் கண்டறியப்பட்டு, கல்வியாண்டு தோறும் தன்னார்வலர்கள் வாயிலாக, அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கல்வியாண்டின் இறுதியில் அவர்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
புதிய கல்வியாண்டிலும், இவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில், கூடுதலாக நுாறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவதற்கு, மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன்படி, அனைத்து பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை வாயிலாக, கல்வியறிவு இல்லாதவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளிகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே முதல் கல்லாதவர்களை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிகளையும், பள்ளி ஆசிரியர்கள் துவக்கியுள்ளனர்.
தற்போது, அவர்களின் விபரங்கள் பள்ளிக்கல்விதுறையின் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.
அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கை, மே இறுதிக்குள் நிறைவு செய்து அனைவரின் விபரங்களையும் இணையதளத்தில் பதிவிடுவதற்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.