ADDED : மே 15, 2026 09:00 PM
திருப்பூர், மே 16–
‘அம்ரித் பாரத்’ திட்டபணிக்காக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அகற்றப்பட்ட ‘எலக்ட்ரானிக் டிஸ்பிளே’ மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திருப்பூர் குமரன் சிலை சந்திப்பு, பஸ் ஸ்டாப், தலைமை தபால் நிலைய சந்திப்பு என துாரத்தில் இருந்து பார்த்தால் கூட ரயில் வருகை, தாமதம், புறப்பாடு குறித்த அறிந்து கொள்ள ‘எலக்ட்ரானிக் டிஸ்பிளே’, ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் இருந்தது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தரைத்தளம் விரிவுபடுத்தும் பணி, ஸ்டேஷன் முகப்பு பகுதி மாற்றியமைக்கும் பணி துவங்கியதால், இரண்டு ஆண்டுக்கு முன் ‘எலக்ட்ரிக் டிஸ்பிளே’ அங்கிருந்து அகற்றப்பட்டது.
பயணிகள் கவுன்டர், தகவல் மையம், ஸ்டேஷனுக்குள் பிளாட்பார்மில் உள்ள டிஸ்பிளே வாயிலாக விபரம் அறிந்து கொண்டனர். இந்நிலையில், முகப்பு பகுதியில், 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, இரு இடங்களில் மீண்டும் ‘எலக்ட்ரிக் டிஸ்பிளே’ நிறுவப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நேற்று முதல் ரயில்கள் விபரம் ஒளிபரப்பாகிறது. இரவில் எவ்வளவு துாரத்தில் இருந்து பார்த்தாலும், பளிச்சென தெரிவதால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
