ADDED : செப் 01, 2024 11:22 PM

விஷ்ணு பிரபு, பின்னலாடை ஏற்றுமதியாளர்
திருப்பூர் பின்னலாடை தொழில், அடுத்தகட்டத்துக்கு வளர வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஏற்ப, இளம் தலைமுறையினர், புதிய யுத்திகளை கையாண்டு தொழிலை மேம்பட செய்ய வேண்டும். படித்து முடித்ததும், தொழில் குறித்து நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினர், பின்னலாடை தொழிலில் கால்பதித்து வருகின்றனர்.
திருப்பூர் பருத்தி நுாலிழை ஆடை ஏற்றுமதியில், வலுவான இடத்தில் இருக்கிறது. உலக நாடுகள், 10 ஆண்டுகளாக, செயற்கை நுாலிழை ஆடைகளை எதிர்பார்க்கின்றன. அத்தகைய ஆடை உற்பத்தியில், திருப்பூர் கடைசி இடத்தில் இருக்கிறது.
புதிய தொழில்முனைவோர், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில், மாறுபட்ட வகையில், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை வழங்க அதிகம் உழைக்க வேண்டும். சர்வதேச அளவில், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஆடை வடிவமைக்கப்பட வேண்டும்.
டில்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லுாரியில், பி.காம்., படித்தது; பெங்களூருவில் எம்.பி.ஏ., மற்றும் அமெரிக்காவில் எம்.எஸ்., படித்ததன் மூலம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கான, வழிமுறைகளை என்னால் உணர முடிந்தது.
உற்பத்தி செலவுகளை குறைத்து, தரமான ஆடைகளை தயாரிப்பதன் மூலம், போட்டியாளர்களை சமாளிக்க முடியும். அதற்காக, புதிய 'சாப்ட்வேர்' களை பயன்படுத்த தயாராக வேண்டும். மாறுபட்ட வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன; நாம் சரியான அணுகுமுறையுடன் வாய்ப்புகளை கவர வேண்டும்.
*
புதிய மாற்றங்கள் மலரும்
சீரும் சிறப்பும் பெருகும்
பிரபுசங்கர், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்
1971 முதல் திருப்பூரில் எங்களது பின்னலாடை உற்பத்தியகம் இயங்கி வருகிறது; எனது தாத்தா சாமிநாதன் துவங்கி, தந்தை பாலசந்தர் வழிநடத்தி வருகிறார். எம்.பி.ஏ., மற்றும் அமெரிக்காவில் எம்.எஸ்., படித்து முடித்த பிறகு, தொழிலில் இறங்க முடிவு செய்தேன்.
நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வந்தால், தொழில் கற்க முடியாது; அதற்காக, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில், பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணியாற்றினேன். அதன் மூலம், பின்னலாடை தொழில் நடைமுறையை நன்கு அறிந்துகொண்டு, மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோராக களமிறங்கினேன். கடந்த, 2022ம் ஆண்டு முதல், முழு நேரமும் தொழிலை கவனித்து வருகிறேன். வழக்கமான உற்பத்தி என்ற நிலையில் இருந்து, மாறுபட்ட 'ஸ்டைலிஷ்' ஆன உற்பத்தியாக இருக்க வேண்டும். வரும்காலங்களில், தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல; தொழில் நடத்தவே, 'பிராண்டிங்' என்ற நிலையை அடைய வேண்டும்.
பல ஆண்டுகளாக பிராண்டட் நிறுவனமாக இருந்தாலும், அது, 'பிராண்டிங்' ஆக மாறியிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், நாம் மாற்றங்களை செயல்படுத்த வேண்டும். 'லோகோ' வடிவமைப்பு முதல், நேர்த்தியான பேக்கிங் வரையில், ஒவ்வொரு படிநிலையிலும், நாம் புதிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும். அப்போதுதான், பனியன் தொழில் அடுத்தகட்டத்துக்கு வளரும்.**
போட்டி நிறைந்த வர்த்தகம்
சிறந்த தயாரிப்பே சாதகம்
பிரவீன், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்
திருப்பூர் பனியன் தொழில் நடைமுறைகளை அறிந்து, அவற்றை எப்படியெல்லாம், மேம்படுத்தலாம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். படித்து முடித்தோம்; தொழில் நடத்துகிறோம் என்று இருந்துவிடக்கூடாது.
என் குடும்பத்தை சேர்ந்த தாத்தா பழனிசாமி, அப்பா மணிகண்டன் ஆகியோர், பனியன் தொழிலை வெற்றிகரமாக நடத்தினர். இனி, நானும் எனது கல்வியறிவை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வர்த்தகம் வாயிலாகவும் தொழிலை விரிவாக்க முயற்சித்து வருகிறேன்.
கடந்த, 2016ல் எம்.பி.ஏ., படித்து முடிந்ததும், பனியன் தொழிலை கவனிக்க துவங்கினேன்; அதற்கு பிறகுதான், எங்கள் நிறுவனத்தின், 'பிராண்ட்'டை வெளியே கொண்டுவரும் முயற்சி வேகமெடுத்தது. 'டிஜிட்டல் மார்க்கெட்' மூலமாகவும், பனியன் வர்த்தகத்தை கொண்டு செல்லலாம்.
திருப்பூர் என்றாலே, பனியன் நகரம் என்ற பெயர் இருந்தது. தற்போது, பல்வேறு மாநிலங்களிலும், இத்தொழில் கால்பதித்துவிட்டது. இதன்காரணமாக, நாம் அடுத்தகட்ட மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். இதுவரை, வாடிக்கையாளர் திருப்பூரை தேடி வந்து கொண்டிருந்தனர்; தற்போது, நாம் வர்த்தகர்களை தேடி சென்று கொண்டிருக்கிறோம்.
வாடிக்கையாளர் விரும்பும் வகையில், நமது தயாரிப்புகளை வழங்கினால் மட்டுமே, போட்டி நிறைந்த வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும்.