/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உற்சாகம் துள்ள துாரியாடிய குட்டீஸ்; ஆடிப்பெருக்கு கோலாகலம்
/
உற்சாகம் துள்ள துாரியாடிய குட்டீஸ்; ஆடிப்பெருக்கு கோலாகலம்
உற்சாகம் துள்ள துாரியாடிய குட்டீஸ்; ஆடிப்பெருக்கு கோலாகலம்
உற்சாகம் துள்ள துாரியாடிய குட்டீஸ்; ஆடிப்பெருக்கு கோலாகலம்
ADDED : ஆக 04, 2024 05:23 AM

திருப்பூர் : ஆடிப்பெருக்கு பண்டிகையான நேற்று, வீடுகளில் துாரி (ஊஞ்சல்) கட்டி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக துாரியாடி மகிழ்ந்தனர்.
தென்மேற்கு பருவ மழைக்காலத்தில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, ஆறுகளில் புது வெள்ளம் பாய்ந்து வரும். அப்போது, பருவமழைக்கு நன்றி கூறும் வகையில், ஆடி மாதம், 18வது நாளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவது வழக்கம்.
தாத்தா - பாட்டியும்துாரியாடி மகிழ்ச்சி
காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில், ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கு நாளில், துாரி கட்டி ஆடுவது பின்பற்றப்படுகிறது. சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாது, பெற்றோர்களும், தாத்தா -பாட்டிகளும் கூட உற்சாகமாக துாரி ஆடி மகிழ்ந்தனர்.
ஆடிப்பெருக்கு என்பதால், பெரும்பாலான வீடுகளில் வடை, பாயசத்துடன் உணவு பதார்த்தங்களை தயாரித்து, முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்டனர். புதிதாக திருமணமான தம்பதிகள், பவானி கூடுதுறை சென்று, சுவாமியை வழிபட்டு, திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர்.
கருப்பராயன் கோவில், விநாயகர் கோவில்களில், ஆறுகளில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடத்தப்பட்டது. திருப்பூர், காங்கேயம் ரோடு, ஏரிக்கருப்பராயன் கோவிலில், 37ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து, அலங்காரபூஜையும், அன்னதானமும் நடந்தது.
ஆடிப்பெருக்கு என்பதால், கோவில்களில், அதிகாலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, சுவாமியை வழிபட்டனர். பிறந்து சில மாதங்களான குழந்தையை, பெற்றோர் முதன்முதலாக நேற்று கோவிலுக்கு எடுத்துவந்து, தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
கிராமப்புறங்களில் உள்ள கருப்பராயன், கன்னிமார் கோவில், முனியப்ப சுவாமி, சுடலைமாடன் சுவாமி போன்ற கிராம தெய்வங்களுக்கு, ஆடிப்பெருக்கு நாளில், தீர்த்தம் எடுத்து வந்து அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, கிடா வெட்டி, படையலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.