/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரு மடங்கு கூடுதல் விலையில் புதிய ரக நிலக்கடலை விதை வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தி
/
இரு மடங்கு கூடுதல் விலையில் புதிய ரக நிலக்கடலை விதை வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தி
இரு மடங்கு கூடுதல் விலையில் புதிய ரக நிலக்கடலை விதை வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தி
இரு மடங்கு கூடுதல் விலையில் புதிய ரக நிலக்கடலை விதை வேளாண் துறை மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 31, 2024 10:42 PM
திருப்பூர்:புதிய ரக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இரு மடங்கு கூடுதல் விலைக்கு விதை வழங்கப்படுவதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.ஆந்திரா, தமிழகம், குஜராத், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
தேசிய விதை கழகம், புதிய ரக விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இதில், 'ஜி.ஜெ.ஜி -32' என்ற புதிய ரக நிலக்கடலை ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த விதை ரகம், தற்போது நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வேளாண் தொழில் முனைவோர் அணி மாநில செயலர் வேலுசாமி கூறியதாவது:
வேளாண் துறையை பொறுத்தவரை கொள்கை, கோட்பாடு என்பது, நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை. தரமான முதல் தர நிலக்கடலை, கிலோ, 75 முதல், 80 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், வேளாண் துறையினர் ஊக்குவிக்கும் ஜி.ஜெ.ஜி., - 32 ரக நிலக்கடலை விதை, கிலோ, 150 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இதில், மானியம், 40 ரூபாய். இரு மடங்கு கூடுதல் விலைக்கு, புதிய ரக நிலக்கடலை விற்கப்படுகிறது. அதுவும் திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் மானாவாரி சாகுபடி நிறைவு பெறும் சூழலில், விதை நிலக்கடலையை வாங்கி பயன்படுத்த, வேளாண் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
கரீப் பருவ சாகுபடிக்கு விதை நிலக்கடலையை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு வேளாண் துறையினர் கூறுகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
இரு முறை சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் கூட, 4,5 மாதங்கள் விதை நிலக்கடலையை இருப்பு வைத்தால், பூச்சி பிடிக்கும். எனவே, நடைமுறை சார்ந்து வேளாண் துறை செயல்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.