/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீரா'வில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு அரசு உதவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
'நீரா'வில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு அரசு உதவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
'நீரா'வில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு அரசு உதவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
'நீரா'வில் மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு அரசு உதவ விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 17, 2024 11:17 PM
உடுமலை;தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'நீரா' பானத்தை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த தென்னை விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
இப்பகுதியில், நீண்ட கால பயிராக, பல லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், தென்னை சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமாற்றமான 'நீரா!'
சில ஆண்டுகளுக்கு முன், தென்னை மரங்களிலிருந்து இயற்கை பானமான, 'நீரா' உற்பத்தி செய்ய, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 'நீரா' பானம் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது.
தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, இறக்குவதற்கான அனுமதியை வழங்கியது.
ஆனால், இயற்கை பானமான நீரா உற்பத்தியிலும், சந்தைப்படுத்துவதிலும், பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டனர். இதனால், திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது, பல மாதங்களாக, தேங்காய், கொப்பரை வர்த்தகம் பாதிப்பில் உள்ளதால், மீண்டும் 'நீரா' உற்பத்தியும், அதிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த கோரிக்கைகள் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
தென்னை விவசாயிகள் கூறியதாவது:
தென்னை மரங்களில், இருந்து, 'நீரா' பானம் 'ஐஸ்பாக்ஸ்' முறையில், மரங்களிலிருந்து இறக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.ரசாயன கலப்பில்லாத இயற்கை முறையில் இறக்கப்படும், 'நீரா' பானம் ஒரு வாரத்துக்குமேல் பயன்படுத்த முடியாது. இதனால், பெரியளவில் உற்பத்தியை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த பானத்தில் இருந்து, தென்னை சர்க்கரை, வெல்லப்பாகு, தேன், மிட்டாய் உள்ளிட்ட பலவகையான மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க முடியும். இதற்கான, தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், 'நீரா' பானம் இறக்குவதற்கு அனுமதியளித்தும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலையே தொடரும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.