/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவித்தொகைக்கு பதிவு; விவசாயிகள் ஆர்வம் குறைவு
/
உதவித்தொகைக்கு பதிவு; விவசாயிகள் ஆர்வம் குறைவு
ADDED : மார் 10, 2025 12:40 AM
பல்லடம்; உதவித்தொகைக்கு பதிவு செய்ய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது, வேளாண் துறையினர் மத்தியில் கவலையை அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மானியத் திட்டங்கள், சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக, விவசாயிகள், வேளாண்துறை மூலம் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு இம்மாத இறுதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், 62 சதவீத விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 38 சதவீதம் விவசாயிகள் இன்னும் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதாவிடம் கேட்டபோது, 'விவசாயிகளுக்கு, பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் வகையில், அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்யாமல் இருந்ததால், இதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
பல்லடம் வட்டாரத்தில், 35 சதவீத விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாமல் விடுபடும் விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்காது. இ-சேவை மையங்கள் மூலமாகவும், கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும், விவசாயிகள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவிகளைப் பெற, விவசாயிகள் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.