/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
/
விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 26, 2024 10:48 PM

பல்லடம் : 'பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கலால் உதவி ஆணையர் ராம்குமார் தலைமையில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
விவசாயிகள் கூறியதாவது:
பல்லடம் அருகே வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில், முறையாக எந்தவித அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வந்த ஆலை, தாசில்தார் உத்தரவிட்ட பின்னும், மீண்டும் மீண்டும் விதிமுறை மீறி செயல்படுகிறது.இதுபற்றி கேட்டால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறீர்கள். ஆனால், விதி மீறிய ஆலை மீது யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
அனைத்து துறை அதிகாரிகளையும், 'கவனித்து' விட்டுத்தான், ஆலையை நடத்தி வருகிறேன் என்றும், முடிந்தால் தடுத்து பாருங்கள் என, ஆலை உரிமையாளர் பகிரங்கமாக சவால் விடுகிறார். இதற்கு ஏற்ப அதிகாரிகளான நீங்கள் நடவடிக்கை எடுக்காதது, ஆலை உரிமையாளர் சொல்வதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிப்பதற்கு பதில், ரயில் முன் பாய்ந்து விடலாம்.
இவ்வாறு விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.
இது குறித்து தாசில்தார் ஜீவாவுடன் ஆலோசித்த ஜமாபந்தி அதிகாரி ராம்குமார், ''அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆலையில் ஆய்வு மேற்கொண்ட பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதி அளித்தார். இந்த பதிலால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.
---
தாசில்தார் அறைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள்.