/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பராமரிப்பு இல்லாமல் மாயமான அகழி; விவசாயிகள் அதிருப்தி
/
பராமரிப்பு இல்லாமல் மாயமான அகழி; விவசாயிகள் அதிருப்தி
பராமரிப்பு இல்லாமல் மாயமான அகழி; விவசாயிகள் அதிருப்தி
பராமரிப்பு இல்லாமல் மாயமான அகழி; விவசாயிகள் அதிருப்தி
ADDED : மார் 04, 2025 11:33 PM
உடுமலை; உடுமலை அருகே, வன எல்லையில், மண் மேடாக மாறியுள்ள அகழியை துார்வாரி, கோடை காலத்தில், மனித - வனவிலங்கு மோதல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையில், பல ஆயிரம் ஏக்கரில், விளைநிலங்கள் உள்ளன.
அப்பகுதியில், நீண்ட கால பயிராக, தென்னை, மா சாகுபடியும், சீசன் சமயங்களில், நிலக்கடலை, மொச்சை, மக்காச்சோளம் உள்ளிட்ட இதர தானிய சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்தில், மழை இல்லாத போது, தண்ணீர் மற்றும் உணவுத்தேவைக்காக யானை, மான் மற்றும் இதர விலங்குகள், இடம் பெயர்வது வழக்கம். மேலும், மாங்காய் அறுவடை சீசனில், யானைகள் கூட்டம், விளைநிலங்களில் முகாமிட்டு, சேதம் ஏற்படுத்துகின்றன.
அப்போது, மரங்களையும், பாசனத்துக்காக அமைக்கப்பட்ட குழாய் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் விலங்குகள் சேதப்படுத்துகின்றன.
கடந்த, 2013ல் மானுப்பட்டி, கொங்குரார்குட்டை உள்ளிட்ட பகுதிகளில், வனவிலங்குகளால், விளைநிலங்களில், அதிக சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, திருமூர்த்தி அணைப்பகுதியில் இருந்து, ஒன்பதாறு செக்போஸ்ட் வரையும், அங்கிருந்து அமராவதி அணை வரை, வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டது.
சுமார், 15 கி.மீ., தொலைவுக்கு, 33 லட்சம் ரூபாய் செலவில், அகழி தோண்டப்பட்டது. குறிப்பிட்ட தொலைவுக்கு சோலார் மின்வேலியும் அமைத்தனர். இதனால், மனித - வனவிலங்குகள் மோதலுக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது.
ஆனால், அகழியின் தொடர் பராமரிப்பை வனத்துறை கண்டுகொள்ளவில்லை. இதனால், அகழி முழுவதும் மண் மூடி, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மண் மேடாக அகழி மாறியதால், அனைத்து வனவிலங்குகளும் எளிதாக, வனஎல்லையை கடந்து, விளைநிலங்களுக்கு வரத்துவங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், போதிய மழை இல்லாததால், வறட்சி துவங்கியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: வன எல்லை கிராமங்களில், விவசாய சாகுபடி பயிர்களை காப்பாற்ற, அகழி உதவியாக இருந்தது. வனத்துக்குள் உள்ள தடுப்பணைகளை முறையாக பராமரித்து நீர் நிரப்பினால், வனவிலங்குகள், விளைநிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும்.
இது குறித்து, வனத்துறையிடனரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்காக இடம் பெயரும், வனவிலங்குகளை பாதுகாக்கவும், சாகுபடியை பாதிப்பில் இருந்து மீட்கவும், வன எல்லையில், மண் மேடாக மாறியுள்ள அகழியை துார்வார வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.